இறைவனடி எய்தியுள்ள கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்கள், நோயினால் நீண்டகாலமாக வேதனை அனுபவித்தாலும், அவர் தனது செபத்தாலும் துன்பத்தாலும் திருஅவைக்குத் தொடர்ந்து பணி செய்தார் எனப் பாராட்டினார் கர்தினால் ஆஞ்சலோ சொதானோ.
ஜூன் 05, இவ்வியாழன் உள்ளூர் நேரம் முற்பகல் 11.30 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் கர்தினால் லூர்துசாமி அவர்களுக்கு இறுதி வழியனுப்பும் திருப்பலி நிகழ்த்தி மறையுரையாற்றிய, கர்தினால்கள் அவைத் தலைவர் கர்தினால் சொதானோ அவர்கள், கர்தினால் லூர்துசாமி அவர்கள் தலத்திருஅவைகளுக்கும், அகிலத் திருஅவைக்கும் செய்த அரும்பணிகளைப் பாராட்டினார்.
உயிர்த்துடிப்புள்ள, மிகுந்த ஆர்வமிக்க அருள்பணியாளராக பத்து ஆண்டுகள் தனது பாண்டிச்சேரி உயர்மறைமாவட்டத்துக்கும், பத்து ஆண்டுகள் பங்களூரு உயர்மறைமாவட்டத்துக்குமென உழைத்த கர்தினால் லூர்துசாமி அவர்கள், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் அழைப்பின்பேரில் வத்திக்கான் வந்து நற்பணியாற்றினார் எனவும் புகழ்ந்தார் கர்தினால் சொதானோ.
உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என்றுரைத்த தூய பவுல் அடிகளாரின் வார்த்தைகளை அடிக்கடி உச்சரித்த கர்தினால் லூர்துசாமி அவர்களின் ஆன்மா நிறைசாந்தியடைய நாம் அனைவரும் செபிப்போம் எனவும் உரைத்தார் கர்தினால் சொதானோ.
ஆயிரக்கணக்கான இந்தியர்களும் மற்றவர்களும் கலந்துகொண்ட இந்தத் திருப்பலியின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வந்து இறந்த கர்தினால் லூர்துசாமி அவர்களின் பூதஉடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி செபித்தார்.
நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் செயலராக 10 ஆண்டுகளும், பின்னர், கர்தினாலாக கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவராக 7 ஆண்டுகளும் பணியாற்றி ஒய்வுபெற்ற கர்தினால் லூர்துசாமி அவர்களின் உடல் இவ்வெள்ளியன்று இந்தியாவின் பாண்டிச்சேரிக்கு எடுத்துச்செல்லப்படும்.
புதுச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்டத்தின் பேராலயத்தில் ஜூன் 9, திங்களன்று இறுதி அடக்கத் திருப்பலியும், அடக்கச் சடங்குகளும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.