கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றிய கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்கள் திங்கள் ஜூன் 2, 2014 அன்று ரோம் நகரில் இறையடி சேர்ந்தார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இவர் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடப் பேராயத்தின் செயலராகவும் பல்லாண்டுகள் பணியாற்றியவர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள அனுதாபத்தந்தியில் கர்தினால் லூர்துசாமி அவர்கள் குருவாகவும் ஆயராகவும் இந்திய திருஅவைக்கு ஆற்றிய பணிகளையும், மேலும் பல ஆண்டுகள் அகில உலக திருஅவைக்கு ஆற்றிய பணிகளையும் பாராட்டியுள்ளார்.
தனது 90வது வயதை தாண்டிய இவர் தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி கடலூர் மறைமாவட்டத்தில் உள்ள கல்லேரி என்ற கிராமத்தில் பிப்ரவரி 5, 1924ல் பிறந்தார். திண்டிவனத்திலும் கடலுரிலும் தனது பள்ளிப் படிப்பை முடித்த பின் பெங்களுரு புனித பேதுரு இறையியல் கல்லூரியில் மெய்யியலும் இறையியலும் பயின்றார்.
1951ம் ஆண்டு குருவாக திருநிலைபடுத்தபட்டு, இரண்டாம் வத்திகான் பொதுச்சங்கத்தில் பங்கேற்று, பின்னர் 1964ல் பெங்களுரு உயர் மறைமாவட்டத்தில் துணை ஆயராக நியமிக்கப்பட்டு அதன் பின்னர் பேராயராகவும் பணியாற்றினார்.
1971ம் ஆண்டு உரோமைய ஆட்சிதுறையில் பணியாற்ற அழைக்கபெற்ற இவர் 1985ம் ஆண்டு கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இவர் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட நான்காம் கர்தினால் ஆவார். தமிழ்நாட்டில் இருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்தவர் இவர் ஒருவரே.
ரோமையில் மரணம் அடைந்த கர்தினால் லூர்துசாமியின் உடல் வருகிற 5ம் தேதி வத்திகான் பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டு கர்தினால் ஏஞ்சலோ சொடானோ தலைமையில் இறுதி சடங்கு திருப்பலி நடைபெறுகிறது. இதன்பின்னர் போப்பாண்டவர் பிரான்சிஸ் மரித்தோருக்கான ஜெபத்தை கூறி, கர்தினால் லூர்துசாமியின் உடலை ஆசீர்வதிக்கிறார்.
இதன்பின்னர் வருகிற 6ம் தேதி இரவு கர்தினால் சைமன் லூர்துசாமியின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் புதுவைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதனை தொடர்ந்து வருகிற 7,8 ஆகிய தேதிகளில் கர்தினால் லூர்துசாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், 9ம் தேதி புதுவை ஜென்மராக்கினி மாதா பேராலயத்தில் நடைபெறும் திருப்பலிக்கு பின்னர் அடக்கம் செய்யப்படுகிறது.
இதில் ரோம் மற்றும் இந்தியாவில் உள்ள கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை புதுவை பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் மறைமாவட்ட குருக்கள் செய்து வருகின்றனர்.