இவ்வுலக மதிப்பு, அதிகாரம், பணம் ஆகியவற்றின் கவர்ச்சி இதயத்தைக் கடினப்படுத்தும் மற்றும் அது உண்மையான மகிழ்வைக் கொண்டுவராது, மாறாக, நம் அடுத்திருப்பவர்மீது நாம் காட்டும் அன்பும், இறைவழிபாடுமே நம் இதயங்களை மகிழ்ச்சிப்படுத்தும் உண்மையான சொத்துக்கள் என, இவ்வெள்ளி காலை கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மண்ணுலகில் உங்களுக்கென செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம் என, இயேசு தம் சீடர்களுக்குக் கூறும் அறிவுரையை மையமாக வைத்து இவ்வெள்ளி காலை சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இவ்வுலகச் செல்வங்களில் முதலில் எப்போதும் ஆபத்தாய் இருக்கின்றது என்று கூறினார்.
நமக்கும், நம் குடும்பங்களுக்கும் அவசியமானவைகளை வழங்குவதற்குப் பணம் தேவை என்றாலும், எப்போதும் செல்வத்தைச் சேகரிப்பதற்கான வழிகளைத் தேடுவோர் இறுதியில் தங்கள் ஆன்மாக்களை இழந்து விடுவார்கள் என்பதையும் நினைவுபடுத்தினார் திருத்தந்தை.
இந்தச் செல்வங்களை நீங்கள் தேடினால் உங்கள் இதயம் கட்டுபாட்டுக்குள் சென்றுவிடும், நம் இதயங்கள் சுதந்திரமாக இருக்கவேண்டுமென்று இயேசு விரும்புகிறார், நாம் விண்ணகச் செல்வங்களை தேடினால் மட்டுமே நம் இதயங்கள் சுதந்திரமாக இருக்கும் என்றும் திருத்தந்தை கூறினார்.
அன்பு, பொறுமை, பிறர்பணி, இறைவனை வழிபடுதல் ஆகியவையே விண்ணகச் செல்வங்கள் என்றும் திருத்தந்தை தனது மறையுரையில் கூறினார்.