இளையோருக்குக் கல்வி புகட்டி அவர்களை மறைப்பணித்தூதர்களாக மாற்றுவது கடினமான பணியாக இருந்தாலும், அப்பணியை பொறுமையுடனும், உடனடியாகவும் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாரத்தில் ஆண்டுக் கூட்டத்தை நட்த்தும் திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவையின் 45 உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவும் பணக்கார இளைஞரும் பற்றிய நற்செய்திப் பகுதியை மையமாக வைத்துப் பேசினார்.
திருஅவை இளையோரிடம் அணுகும்போது இயேசுவைப் பின்பற்ற விரும்புகிறது என்றும், சிறந்த இளம் போதகர் இயேசு கிறிஸ்து என்பதை உறுதியாய் நம்புகிறது என்றும், அதே உணர்வை அனைவரிலும் ஏற்படுத்த விரும்புகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையின் எந்தப் போதனையிலும் வரவேற்கும் பண்பு மிளிரவேண்டும், கிறிஸ்து அந்தப் பணக்கார இளைஞரைப் பாசத்தோடும் அன்போடும் நோக்கியதுபோல, ஆண்டவர் ஒவ்வொரு மனிதரின் சூழ்நிலையிலும், தன்னைப் புறக்கணிக்கும் நிலையிலும்கூட தம்மை வைக்கிறார் என்றும் விளக்கினார் திருத்தந்தை.
பள்ளிக்குச் செல்லாமை, வேலைவாய்ப்பின்மை, தனிமை, முறிந்த குடும்பங்களில் கசப்புணர்வு போன்ற பல கடும் இன்னல்களை இலத்தீன் அமெரிக்காவில் இளையோர் எதிர்கொள்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, நாம் இளையோரைக் கைவிடக் கூடாது என்றும் கூறினார்.
இளையோரை எப்போதும் வரவேற்று அவர்களுடன் நேர்மையாக உரையாடி, கிறிஸ்துவின் நண்பர்களாக அவர்கள் மாறுவதற்கு உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலத்தீன் அமெரிக்கத் திருஅவைகளுக்கு ஆலோசனை வழங்கி உதவுவதற்கென 1958ம் ஆண்டில் திருப்பீட இலத்தீன் அமெரிக்க அவை உருவாக்கப்பட்டது.