கத்தோலிக்கப் பள்ளிகளில் கற்றுக்கொடுப்பவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி சொல்வோம். கற்றுக்கொடுப்பது அன்பின் கலை; அது வாழ்வை வழங்குவது போன்றது என்று, தனது டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வருகிற மே 24 முதல் 26 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதபூமிக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்துக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் இஸ்ரேலில் கிறிஸ்தவர்களின் நிலைமை குறித்த விபரங்கள் புள்ளி விபரங்களுடன் வழங்கப்பட்டுள்ளன.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் 1964ம் ஆண்டு சனவரி 4 முதல் 6 வரை புனிதபூமிக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின் 50ம் ஆண்டு நினைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகிற மே மாத புனித பூமி திருப்பயணம் அமைகின்றது.
திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் புனித பூமி திருப்பயணம், நவீன காலத்தில் உரோமைக்கு வெளியே திருத்தந்தை ஒருவர் மேற்கொண்ட முதல் திருப்பயணமாகும்.