திருமண வாழ்வில் தோல்வியை அனுபவிப்பவர்களைத் தீர்ப்பிடாமல், அவர்களுடன் திருஅவை உடனிருக்க வேண்டுமென்று இவ்வெள்ளி காலை வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாளைய நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், திருமணத்தின் அழகு பற்றிப் பேசியதோடு, திருமணவிலக்குப் பெற்று வாழும் மக்களைத் தீர்ப்பிடுவதை எச்சரித்தார்.
பரிசேயர்கள் இயேசுவிடம் முன்வைத்த மணவிலக்குப் பற்றிய பிரச்சனை குறித்து விளக்கிய திருத்தந்தை, இயேசு இப்பிரச்சனையின் மையத்துக்கே சென்று, படைப்பின் நாள்கள் பற்றிக் கூறியதை எடுத்துச் சொன்னார்.
படைப்பின் தொடக்கமுதல் கடவுள் மனிதரை ஆணும்பெண்ணுமாகப் படைத்தார், இதனாலேயே ஓர் ஆண் தனது பெற்றோரைவிட்டு தனது மனைவியோடு வாழ்கிறார் என்று உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்து திருஅவையின் மணவாளர் என்பதால் திருஅவையின்றி கிறிஸ்துவைப் புரிந்துகொள்ள முடியாது என்றும் கூறினார்.
கிறிஸ்து திருஅவைமீது வைத்திருக்கும் அன்பின் அழகு பற்றியும் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ், இந்நாளைய நற்செய்திப் பகுதி, கடவுள் தம் படைப்பின் உன்னதப் படைப்பாக ஆசீர்வதித்துள்ள கிறிஸ்தவத் திருமணத்தின் அன்புப் பயணம் குறித்து தியானிப்பதற்கு அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.