இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தேவைகள் குறித்த மதிப்பீடு ஒன்றைத் தொடங்கியுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
காணாமல் போனவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் தெரியாமல் இருக்கும் நிகழ்வுகள் குறித்து மறு ஆய்வு செய்து, உறுதி செய்யவும், அதேபோன்று இந்த விவகாரம் குறித்து தீர்வு காணப்பட்ட விடயங்களை முடிவுக்கு கொண்டுவரவும் இந்த மதிப்பீடு உதவும் என்றும் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
இலங்கை அரசின் ஒப்புதலுடனேயே இந்த மதிப்பீடு செய்யப்படுவதாகக் கூறியுள்ள செஞ்சிலுவைச் சங்கம், 16,000த்துக்கும் அதிகமான காணாமல் போன நிகழ்வுகள் குறித்த பதிவுகள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர், காணாமல் போனவர்கள் குறித்து ஓர் அநைத்துலக அமைப்பு மேற்கொள்ளும் முதலாவது கணிப்பீடு இதுவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.