திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பின்ஸ் நாட்டுப் பேராயர் Orlando Beltran Quevedo அவர்களுக்கு, கர்தினால் பொறுப்பை வழங்கியதன் மூலம், ஏழைகளுக்குப் பணியாற்றுவது திருஅவையின் முக்கியமான பணி என்பதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளார் என்று அமலமரி தியாகிகள் துறவுச்சபையின் அகில உலகத் தலைவர், அருள் பணியாளர் Louis Lougen அவர்கள் கூறினார்.
அமலமரி தியாகிகள் துறவுச் சபையின் உறுப்பினரும், பிலிப்பின்ஸ் நாட்டின் Cotabato உயர் மறைமாவட்டத்தின் பேராயருமான Quevedo அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதிய கர்தினாலாகத் தேர்ந்துள்ளதைக் குறித்து, அருள் பணியாளர் Lougen அவர்கள், Fides செய்திக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கர்தினால் என்ற சொல்லுக்கு, “திருஅவையின் இளவரசர்” என்ற அடைமொழியும் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டிய அருள் பணியாளர் Lougen அவர்கள், திருஅவையில் தலைமைப் பொறுப்பு என்பது பணியாற்றுவதற்கே என்பதை, திருத்தந்தையின் இந்தத் தெரிவு உறுதி செய்துள்ளது என்று கூறினார்.
ஏழைகள் மத்தியில் உழைப்பதிலும், Mindanao தீவில் இஸ்லாமியருடன் உரையாடல்களை மேற்கொள்வதிலும் தயக்கமின்றி உழைத்த பேராயர் Quevedo அவர்களைத் தெரிவு செய்ததன் வழியாக, திருத்தந்தை சரியானதொரு செய்தியை நமக்கு அளித்துள்ளார் என்று அமலமரி தியாகிகள் துறவுச்சபையின் அகில உலகத் தலைவர் அருள் பணியாளர் Lougen எடுத்துரைத்தார்.