இச்செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் மழை பெய்துகொண்டிருந்த உரோம் மாநகரில் இப்புதன் காலை கதிரவனின் ஒளிக்கதிர்கள் பளிச்சென வீசத்தொடங்கின. வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைபோதகம் நடைபெற இந்தக் காலநிலை வசதியாக இருந்தது.
திறந்த காரில் மக்கள் மத்தியில் வலம் வந்து குழந்தைகளை முத்தமிட்டு மக்களை வாழ்த்திய பின்னர் மேடையில் அமர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்புச் சகோதர சகோதரிகளே, கடந்த புதனன்று அருளடையாளங்கள் பற்றிய மறைக்கல்வித் தொடரில் திருமுழுக்கு அருளடையாளம் பற்றிப் பார்த்தோம். இத்திருமுழுக்கு அருளடையாளத்தின் மிக முக்கிய பலன் பற்றி இன்று சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என மறைபோதகத்தைத் தொடங்கினார்.
திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவின் மறையுடலாம் திருஅவையின் உறுப்பினர்களாக மாறுகிறோம். திருமுழுக்கு வழியாக, ஒவ்வொரு தலைமுறையிலும் திருவருளின் புதிய வாழ்வுக்கு மறுபிறப்பு எடுக்கிறோம் மற்றும் உலகின்முன் நற்செய்திக்குச் சான்றுகளாக வாழவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
திருமுழுக்கு நம்மை, திருஅவையின் ஒன்றிப்புக்குள் “மறைபோதகச் சீடர்களாக” ஆக்குகின்றது. மேலும், நீரிலும் தூய ஆவியிலும் நாம் மீண்டும் பிறப்பதற்கிடையே, திருஅவைக்குள், நம் குடும்பங்களில், நம் பங்குத்தளங்களில் இப்புதுவாழ்வை வாழ்வதற்கான நம் பொறுப்புகளுக்கிடையே, கடவுள் அருளின் வாய்க்கால்களாக பிறருக்கு நற்செய்தியை எடுத்துச்செல்லும் நம் மறைப்பணிகளுக்கிடையே நெருங்கிய பிணைப்பு உள்ளது.
இதற்கு ஜப்பான் திருஅவையின் தனிச்சிறப்பான வரலாற்றை நாம் ஓர் எடுத்துக்காட்டாக நோக்கலாம். இத்தலத்திருஅவையின் சிறிய விசுவாசிகள் குழுக்கள் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மறைந்து வாழ்ந்தன. இத்தகைய வாழ்வு வாழ அவர்களுக்கு உதவியது திருமுழுக்குத் திருவருளே. இதற்கு நாம் நன்றி சொல்வோம். இந்த எடுத்துக்காட்டு, நம் ஒவ்வொருவரின் திருமுழுக்கு அருளடையாளத்தின் ஆழமான மறையுண்மையையும், திருஅவையின் சமூக வாழ்வையும், அதன் மறைபோதகக் கூறுகளையும் இன்னும் முழுமையாகப் போற்றுவதற்கு நமக்கு உதவுவதாக.
இவ்வாறு, புதன் பொது மறைபோதகத்தை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதில் கலந்துகொண்ட அனைத்துத் திருப்பயணிகளையும் அவர்களின் குடும்பத்தினரையும் கிறிஸ்துவின் மகிழ்வும் அமைதியும் நிறைக்கட்டும் என வாழ்த்தி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.