குடும்பங்களின் மகிழ்வுக்காக அமைதியில், மறைவில் செபித்துவரும் பல்லாயிரம் அருள் பணியாளர்களில் ஒருவர் என்ற நிலையில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள கர்தினால் பொறுப்பை தான் மிகுந்த மன அமைதியோடு ஏற்றுக் கொள்வதாக பேராயர் Loris Francesco Capovilla அவர்கள் கூறினார்.
தனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பைக் குறித்து பேராயர் Capovilla அவர்கள், Zenit செய்திக்கு அளித்த பேட்டியில், தன்னால் தற்போது திருஅவைக்கு ஆற்றக்கூடிய பணி இறைமக்களுக்காகச் செபிக்கும் பணி ஒன்றே என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 12, கடந்த ஞாயிறன்று அறிவித்த 19 புதிய கர்தினால்களில் வயதில் மிகவும் அதிகமானவர், Mesembria என்ற மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் Capovilla அவர்கள்.
98 வயதை நிறைவு செய்துள்ள பேராயர் Capovilla அவர்கள், முன்னாள் திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற 23ம் ஜான் அவர்களுக்கு செயலராகப் பணியாற்றியவர் என்பதும், திருஅவை வரலாற்றில் இத்தனை முதுமையான வயதில் கர்தினாலாக உயர்த்தப்படுபவர் இவராகத்தான் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.