சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளவர்களுக்காகவும், ஏழைகளுக்காகவும், திருஅவை உழைக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள கண்ணோட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பேன் என்று ஆசியப் பேராயர் ஒருவர் கூறியுள்ளார்.
சனவரி, 12, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்த 19 கர்தினால்களில் ஒருவரான, தென் கொரியாவின் Seoul உயர்மறைமாவட்டப் பேராயர், Andrew Yeom Soo-jung அவர்கள், இவ்வாறு கூறினார்.
கர்தினால் என்ற பொறுப்பை தனக்கு வழங்கியுள்ள திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்த பேராயர் Yeom Soo-jung அவர்கள், திருஅவையின் பணிகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொண்டுள்ள கனவுகளை செயல்படுத்த தனக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
Seoul பேராயர்களாகப் பணியாற்றிய, மறைந்த கர்தினால் Kim Sou-hwan அவர்களும், முன்னாள் கர்தினால் Nicholas Cheong Jin-suk அவர்களும் ஆற்றிய பணிகளுக்கு நன்றியும் தெரிவித்தார் புதிய கர்தினாலாகப் பொறுப்பேற்கவிருக்கும் பேராயர் Yeom Soo-jung.
தனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பை பேராயர் Yeom Soo-jung அவர்கள் திறம்படச் செய்து, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவார் என்று முன்னாள் பேராயர் கர்தினால் Cheong Jin-suk அவர்கள் மகிழ்வுடன் கூறினார்.