மன்னார் மற்றும் யாழ். ஆயர்கள் தாம் கேட்டறிந்த உண்மைகளையே அமெரிக்கத் தூதரிடம் சொன்னார்களே தவிர பொய்களை அவர்கள் உரைக்கவில்லை. அவர்களைத் தேசத்துரோகிகள் என்று சொல்லி, கைது செய்ய வேண்டுமென்று போர்க்கொடி தூக்குவது அரசியல் நாகரிகமற்ற செயலாகும் என்று கிழக்கு மாகாண ஆயர்களும், சிலாபம் மறைமாவட்ட ஆயரும் தெரிவித்தனர்.
மன்னார் மற்றும் யாழ். ஆயர்கள் இருவரும் தேசத்துரோகச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொதுபலசேனா அமைப்பினரும் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஒரு சில இனவாத அமைப்பினரும் கூறிய கருத்துக்கு மறுதலிப்பாக திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸிலி சுவாமிபிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா மற்றும் ஆயர்மன்ற செயலாளரும் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வலன்ஸ் மென்டிஸ் ஆகியோரும் ஒன்றிணைந்து வெளிட்ட கருத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்கள் என தமிழ்வின் செய்தி கூறுகிறது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், யாழ். மாவட்ட ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் ஆகிய இருவரும், யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப்பிடம், தாங்கள் மக்களிடமிருந்து கேட்டறிந்த உண்மைகளையும் கண்டறிந்த செய்திகளையுமே எடுத்துக் கூறியுள்ளனர், இவற்றில் உண்மைத் தன்மை உண்டா? இல்லையா? என்பதைக் கண்டறிய வேண்டிய பொறுப்பு அரசிடமேயுண்டு எனவும் கிழக்கு மாகாண ஆயர்களும், சிலாபம் மறைமாவட்ட ஆயரும் தெரிவித்துள்ளனர்.