கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப்பாண்டவர் வசிக்கும் வாடிகன் நகர தேவாலயத்தில் நேற்று மக்கள் அவரது ஞாயிற்றுக்கிழமை ஆசீர்வாதக் கூட்டத்திற்காகக் கூடியிருந்தனர்.
மக்கள்முன் போப் பிரான்சிஸ் தோன்றியபோது வரும் மே மாதம் 24-26 வரை தான் மத்தியக் கிழக்கு நாடுகளான இஸ்ரேல், வெஸ்ட் பேங்க் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு சென்று வர இருப்பதாகத் தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான போப்பாண்டவரின் முதல் தீர்மானிக்கப்பட்ட முதல் பயணம் இதுவாகும். இதற்கு முன்னர் சென்ற ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற இளைஞர் திருவிழா தினத்திற்கு போப் பிரான்சிஸ் சென்றிருந்தார்.
தனது மூன்று நாள் பயணத்தின்போது அம்மான், பெத்லஹெம், ஜெருசலேம் ஆகிய இடங்களுக்கு போப் செல்ல உள்ளார். இவரது பயணத்தின் முக்கியக் குறிக்கோள் ஜெருசலேமில் உள்ள பழமைவாதக் கிறிஸ்துவர்களின் தலைவராக விளங்கும் அட்டங்கோராவை போப் ஆறாவது பால் சந்தித்த 50 ஆவது ஆண்டு நினைவைக் குறிப்பதாகும்.
தற்போது அங்கு வாழும் கிறிஸ்துவத் தலைவர் பார்தோலோமியுவை சந்திக்கும் போப் பிரான்சிஸ் அவருடன் இணைந்து இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட புனித இடத்தில் பிரார்த்தனை செய்ய உள்ளார்.
இது மட்டுமின்றி யூதர்களுடனான அவரது நெருக்கத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த விஜயம் அமையும். மேலும், மத்தியக் கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய நாடுகளிடையே அமைதி ஏற்படவேண்டி போப் நீண்ட காலமாக அழைப்பு விடுத்து வருகின்றார்.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இந்த அமைதி பேச்சுவார்த்தைக்காக கடந்த மூன்று தினங்களாக இரு நாட்டுத் தலைவர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த நிலையில் போப்பின் இந்த விஜயம் குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தனது கிறிஸ்துமஸ் தின செய்தியிலும் இஸ்ரேல், பாலஸ்தீனிய நாடுகளுக்கிடையே அமைதி ஏற்படவேண்டி போப் குறிப்பிட்டிருந்தார்.
கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான ஜெருசலத்திற்கு விஜயம் செய்யும் நான்காவது போப் இவராவார். ஆறாவது பால் 1964 ஆம் ஆண்டிலும், இரண்டாம் ஜான் பால் 2000 ஆவது ஆண்டிலும் மற்றும் பதினாறாம் பெனடிக்ட் 2009 ஆம் ஆண்டிலும் இங்கு வருகை தந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.