புனித லொயோலா இஞ்ஞாசியாருடன் இணைந்து இயேசு சபையை உருவாக்கிய முதல் குழுவினரில் ஒருவரான முத்திப்பேறு பெற்ற Peter Faber அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று புனிதராக அறிவித்துள்ளார்.
புனிதர் நிலைக்குப் பரிந்துரைக்கும் திருப்பீட பேராயத்தின் தலைவரான கர்தினால் Angelo Amato அவர்களை, இச்செவ்வாய் மாலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முத்திப்பேறு பெற்ற Peter Faber அவர்களை, புனிதராக உயர்த்தி, திருஅவையின் புனிதர்கள் பட்டியலில் இணைத்தார்.
திருத்தந்தையர், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு சிலரை புனிதர்களாக அறிவிக்கும் பழக்கம் திருஅவையில் நிலவி வருகிறது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Hildegard என்பவரை புனிதராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இச்செவ்வாயன்று புனிதராக அறிவிக்கப்பட்ட புனித Peter Faber அவர்கள், 1506ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் Savoy எனுமிடத்தில் ஓர் எளியக் குடும்பத்தில் பிறந்தவர். பாரிஸ் நகரில் இவர் பயின்றபோது, புனிதர்களான இஞ்ஞாசியார், சேவியர் ஆகியோருடன் ஒரே அறையில் தங்கி பயின்றார்.
1534ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட Peter Faber அவர்கள், உரோம் நகரில் விவிலிய ஆசிரியராகப் பணியாற்றினார். கத்தோலிக்கத் திருஅவைக்கு சவாலாக எழுந்த லூத்தரின் வழியைப் பின்பற்றியவர்களுடன் உரையாடலை மேற்கொள்வதில் பெரும் ஆவல் கொண்டிருந்தார்.
கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மீது உள்ளார்ந்த மதிப்பு கொண்டு, அவர்களுடன் உரையாடலை மேற்கொண்ட Peter Faber அவர்களின் திறந்த மனதும், இறைவனை ஆழ்நிலை தியானத்தில் அவர் கண்ட முறையும் அவரைப் புனிதராக கருதுவதற்குக் காரணங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
1546ம் ஆண்டு தன் 40வது வயதில் இறையடி சேர்ந்த Peter Faber அவர்களை, 1872ம் ஆண்டு திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.
மேலும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்ந்த இறையடியாரான அருள் சகோதரி Miriam Teresa Demjanovich, ஸ்பெயின் நாட்டில் வாழ்ந்த மறைமாவட்ட அருள் பணியாளர் Emanuele Herranz Establés, மற்றும் போலந்து நாட்டில் ஒரு குடும்பத்தின் தலைவராக வாழ்ந்த George Ciesielski ஆகியோரை முத்திப்பேறு பெற்றவர்களாக அறிவிக்கும் வரைமுறைகளைத் துவக்குவதற்கு, திருத்தந்தை இச்செவ்வாயன்று இசைவளித்துள்ளார்.