இன்றைய இளைய தலைமுறையினர் ஒரு நாளில் பல மணிநேரங்களை முகநூலில் செலவிடுவதைத் தவிர்த்து புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
அயர்லாந்து காணிக்கை அன்னை சபையை நிறுவிய இறையடியார் Nano Nagle அவர்களை முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்துவதற்கான ஆவணங்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கீகரித்துள்ளதைச் சிறப்பிப்பதற்காக இடம்பெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
சென்னையிலுள்ள Sacred Heart Metriculation பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்களும், இந்தியாவுக்கான அயர்லாந்து சிறப்பு தூதர் ராஜீவ் மேச்சேரி அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி, இறையடியார் Nano Nagle, அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்தவர். அவருடைய காலத்தில், கல்வி அத்தியாவசிய தேவையாக இருந்தது; இன்றும், கல்வி அத்தியாவசிய தேவையாக இருந்தபோதிலும், இன்னும் சில தேவைகள் இருப்பதையும், நிகழ்காலத்தின் தேவையையும் உணர்ந்து சேவை புரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இன்றைய இளைய தலைமுறையினர் ஒரு நாளில், பல மணிநேரங்களை முகநூலில் செலவழிப்பதைத் தவிர்த்து, நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும், அதன் மூலம், சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்றும் கூறினார் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
இறையடியார் Nano Nagle அவர்களின் வீரத்துவமான வாழ்வுமுறையை ஏற்று, அவரை வணக்கத்துக்குரியவர் என கடந்த அக்டோபர் 31ம் தேதி அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.