பணியில் திறமை, சேவை உள்ளம், வாழ்வில் தூய்மை ஆகிய மூன்றும் திருப்பீடத்தில் பணியாற்றுவோர்க்கு அவசியம் என்று, திருப்பீட அதிகாரிகளிடம் இச்சனிக்கிழமையன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் கர்தினால்கள், இன்னும் பிற அதிகாரிகளை இச்சனிக்கிழமையன்று சந்தித்து கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பரிமாறி உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த அதிகாரிகள் அனைவரும் திருத்தந்தைக்கும், ஆயர்களுக்கும், அகிலத் திருஅவைக்கும், தலத்திருஅவைகளுக்கும் ஆற்றிவரும் அருமையான பணிகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், இப்பணிகளைத் திறம்பட ஆற்றியவர்களின் பெயர்களை முதலில் சொல்லி நன்றி தெரிவிக்க விரும்புவதாகவும், ஆயினும், அவர்கள் இங்கு இல்லையெனவும் கூறினார்.
திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றுவதற்கு முதல் அடிப்படைத் தேவை திறமை என்றும், இரண்டாவது தேவை தொண்டுள்ளம் என்றும், இவற்றுக்கு அடுத்ததாகத் தேவைப்படுவது தூய வாழ்வு என்றும் கூறிய திருத்தந்தை, நமது பணியும் சேவையும் தரத்தில் சிறந்தோங்குவதற்கு தூய வாழ்வு இன்றியமையாதது என்று விளக்கினார்.
தூய ஆவியில் மூழ்கியுள்ள வாழ்வு, கடவுளுக்குத் திறந்தமனம், இடைவிடா செபம், ஆழமான மனத்தாழ்மை, நம்முடன் பணிசெய்பவருடன் கொள்ளும் உறவில் சகோதரத்துவ பிறரன்பு ஆகியவை தூய்மைத்துவத்தில் அடங்கியுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, திருப்பீடத்தில் இந்தத் தூய்மைத்துவம் புறங்கூறாமையையும் உள்ளடக்கியுள்ளது என்று கூறினார்.
நம்மைப் பாதுகாப்பதற்காக எழுதப்படாத சட்டமாக நம் சூழல்களில் புறங்கூறுதலை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம், ஆனால், இது மனிதருக்கும், நமது பணிக்கும், நம் சூழல்களுக்கும் ஊறுவிளைவிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இறுதியில் தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், தானும் அவர்களுக்காகச் செபிப்பதாகத் தெரிவித்து, புனித வளனை நம் பணிக்கு எடுத்துக்காட்டாய்க் கொள்வோம் எனக் கூறி, கிறிஸ்மஸ் வாழ்த்துக்களுடன் இவ்வுரையை நிறைவு செய்தார்.