கத்தோலிக்க தேவாலயங்களில் பணிபுரிவோரின் பாலியல் குற்றங்களுக்காக உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை அந்தத் தேவாலயங்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால், அமெரிக்காவில் பல மறைமாவட்டங்கள் திவாலான நிலைமைக்கே வந்துள்ளன. இதுகுறித்து கத்தோலிக்கர்களின் தலைவரான போப்பாண்டவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குறை கிறிஸ்துவ மக்களிடையே இருந்துவந்தது.
இதன் முதல்கட்டமாக தேவாலயங்களுக்குள் நடைபெறும் குழந்தை பாலியல் துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கென ஒரு சிறப்புக் குழுவை போப் பிரான்சிஸ் அமைக்க உள்ளதாக பாஸ்டனின் பேராயரான கர்தினால் சீன் பாட்ரிக் ஓ மல்லே நேற்று தெரிவித்துள்ளார்.
இந்தக்குழு குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், குற்றம் சுமத்தப்படும் ஊழியர்களின் நடவடிக்கைகள் குறித்தும் போப்பிற்கு தகவல்களும், ஆலோசனையும் அளிக்கும் என்றும் அவர் கூறினார். இந்தக் குழுவின் துல்லியமான நோக்கமும், திட்டமும் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை.
ஆயினும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், ஆயர்களின் கண்காணிப்பை மேம்படுத்துதல், பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வழிகளை ஆராய்தல் மற்றும் இத்தகைய வழக்குகளில் சட்ட அதிகாரிகளுடன் ஒத்துழைத்தல் போன்ற செயல்களில் இந்தக் குழு ஈடுபடக்கூடும் என்று ஓ மல்லே தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டோரின் மனநல மேம்பாட்டிற்கும், அவர்களின் சமூகங்களுக்கும் இந்தக் குழு உதவி புரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. குழந்தைப் பாதுகாப்பு குழு குறித்த பரிந்துரை புதன்கிழமையன்றுதான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று போப் பிரான்சிசிடம் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டபோது அவர் இதனை உடனே ஒப்புக்கொண்டுள்ளார். எனவே இந்தத் திட்டம் விரைவில் அமலுக்கு வரக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.