இக்காலத்தில் திருஅவையில் முதியோர் இன்றியமையாதவர்களாக இருக்கும்வேளை, அவர்கள் நலனில் அக்கறை காட்டுவதில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் திருஅவை எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட நலவாழ்வுப்பணி அவை நடத்திய 28வது அனைத்துலக கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் மற்றும் நோயாளர்களை இச்சனிக்கிழமை நண்பகலில் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், முதியோர் சிலநேரங்களில் கடும் நோயின் பாதிப்பால் இருந்தாலும்கூட அவர்கள் எப்பொழுதும் முக்கியமானவர்கள் என்பதை வலியுறுத்தினார்.
இருபதாம் நூற்றாண்டில் மனிதரின் ஆயுள்காலம் அதிகரித்துள்ளது, அதேசமயம், நினைவாற்றல் இழப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய திருத்தந்தை, இவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளுடன், இவர்களின் மாண்பும், சுதந்திரமும் மதிக்கப்படுவதில் கவனம் செலுத்தப்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த நோயாளிகளின் புலணுணர்வு சக்திகள் குறைந்தோ அல்லது எதுவுமே இல்லாமல் இருக்கும்போதுகூட இவர்களுக்கு சமய மற்றும் ஆன்மீக உதவிகள் வழங்கப்படுமாறும்
திருத்தந்தை வலியுறுத்தினார்.
முதியோர், நற்செய்தியைப் பெறுபவர்களாக மட்டும் இல்லாமல், அவர்கள் பெற்றுள்ள திருமுழுக்கால் நற்செய்தியை அறிவிப்பவர்களாகவும் உள்ளார்கள் என்றும், இவர்கள் தங்கள் குடும்பங்கள், பங்குகள், இன்னும், தாங்கள் வாழும் சூழல்களில், குறிப்பாக இளையோர் மத்தியில் தினமும் நற்செய்தியை அறிவித்து இயேசுவுக்குச் சாட்சிகளாக வாழுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அல்செய்மர் என்ற நினைவாற்றல் இழப்பு நோயால் மட்டும் இன்று உலகில் 3 கோடியே 50 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒவ்வொரு நாளும் 77 இலட்சம் பேர் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர்.