2016ம் ஆண்டு ஜூலையில் போலந்தின் கிராக்கோவில் சிறப்பிக்கப்படும் 31வது உலக இளையோர் தினத்துக்கான மூன்றாண்டுகள் ஆன்மீகத் தயாரிப்பாக, அடுத்த மூன்று உலக இளையோர் தினங்களுக்கான தலைப்புக்களை இவ்வியாழனன்று அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2014ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் 29வது உலக இளையோர் தினத்துக்கு, “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது” (மத். 5:3) என்பதும், 2015ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் 30வது உலக இளையோர் தினத்துக்கு, “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்”(மத்.5:8) என்பதும், 2016ம் ஆண்டு போலந்தின் கிராக்கோவில் சிறப்பிக்கப்படும் 31வது உலக இளையோர் தினத்துக்கு, “இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” (மத். 5:7)என்பதும் தலைப்புக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு ஜூலை 25ம் தேதியன்று ரியோ தெ ஜனெய்ரோவின் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இளையோரைச் சந்தித்தபோது, இயேசுவின் மலைப்பொழிவுப் போதகத்தில் கூறிய நற்பேறுபெற்றோர் பகுதியை உள்ளார்ந்து வாசித்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.