இம்மாதம் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை பிரான்சின் லூர்து நகரில் தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திவரும் பிரான்ஸ் நாட்டு ஆயர்களுக்கு தன் சிறப்புச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயர் பேரவையின் இக்கூட்டத்தில், குருத்துவப் பயிற்சி குறித்தும் விவாதிக்கப்பட்டுவருவதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறியாதவர்களிடையேயும் அச்சமின்றிச் சென்று அவர் செய்தியை அறிவிக்கும் குருக்களை உருவாக்க வேண்டியத் தேவையை வலியுறுத்தியுள்ளார்.
ஏழை மக்களுக்கு உதவும் வகையில் சமூகப் பிரச்சனைகள் குறித்து ஆயர்கள் விவாதித்து வருவதற்கும் தன் முழு ஆதரவையும் அச்செய்தியில் வழங்கியுள்ளார் திருத்தந்தை. மனிதர்கள் மீதான திருஅவையின் அக்கறை, ஒவ்வொரு மனிதர் மீதும் இறைவன் காட்டும் இரக்கத்தின் சாட்சியாக உள்ளது எனவும் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.