ஏழைகளின் நண்பராய், பறவைகள், விலங்குகளின் உறவினராய், இயற்கையின் பாதுகாவலராய்ப் போற்றப்படுபவர் அசிசி நகர் புனித பிரான்சிஸ். மத்திய இத்தாலியின் அசிசியில் செல்வக் குடும்பத்தில் பிறந்த பிரான்சிஸ், இளைஞனாக இருந்தபோதே தான் அணிந்திருந்த ஆடைகள் முதற்கொண்டு அனைத்தையும் தனது தந்தையிடம் கழற்றிக் கொடுத்துவிட்டு எளிமையை தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்று எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு வாழ்ந்தவர். 1181ம் ஆண்டில் பிறந்து 1226ம் ஆண்டில் இறந்த இப்புனிதர் இன்றும் மத வேறுபாடின்றி எல்லாராலும் போற்றப்படுவதற்கு அவரது எளிய, தூய இயற்கையோடு இயைந்த வாழ்வே காரணம்.
இப்புனிதரின் எளிமையால் சிறுவயது முதல் ஈர்க்கப்பட்ட நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பிரான்சிஸ் என்ற பெயரைத் தெரிவுசெய்து திருஅவை வரலாற்றில் புதிய மைல்கல்லை நாட்டினார். இதுவரை இப்புனிதரின் பெயரை எந்தத் திருத்தந்தையும் தெரிவுசெய்யவில்லை.
அக்டோபர் 4 அசிசி நகர் புனித பிரான்சிஸ் விழா. தனது வாழ்வில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இப்புனிதர் வாழ்ந்து இறந்து அடக்கம் செய்யப்பட்டுள்ள அசிசி நகருக்கு, இவ்விழா நாளன்று ஒரு நாள் திருப்பயணத்தை இந்நாளின் உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கே தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே, அதாவது 7.30 மணிக்கெல்லாம் திருத்தந்தை பயணம் செய்த வெள்ளைநிற கெலிகாப்டர் அசிசி நகர் செராஃபிக்கோ நிறுவன விளையாட்டு வளாகத்தில் தரையிறங்கியது.
கத்தோலிக்கத் திருஅவையின் நிர்வாகத்தில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமனம் செய்யப்பட்ட எட்டுக் கர்தினால்களும் அவருடன் சென்றனர். செராஃபிக்கோ நிறுவனத்திலுள்ள சிற்றாலயத்தில் மாற்றுத்திறனாளிச் சிறார், மாற்றுத்திறனாளி இளையோர் என ஏறக்குறைய அறுபது பேர் அவர்களைக் கவனிப்பவர்களுடன் கூடியிருந்தனர்.
அங்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ், ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் கைகளைப் பிடித்து அவர்களின் முகங்களைத் தடவிக்கொடுத்து அவர்களின் நெற்றியில் சிலுவை வரைந்து கன்னங்களை முத்தமிட்டார். ஒரு மாற்றுத்திறனாளி, திருத்தந்தை கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவையை முத்தி செய்தார்.
இந்த செராஃபிக்கோ நிறுவனத்தில், அசிசி நகர் மேயர் Claudio Ricci, அந்நிறுவனத் தலைவர் Francesca Di Maolo ஆகிய இருவரும் முதலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றுப் பேசினர். இந்நிறுவனத்தில் குணப்படுத்தப்படும் காயங்கள் பற்றிச் சொன்னார் அந்நிறுவனத் தலைவர் Di Maolo. பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தான் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த உரையை வாசிக்காமல் அவராகவே அந்நேரத்தில் எழுந்த உள்ளத்துணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அர்ஜென்டீனா நாட்டு புவனோஸ் ஐரெஸிலிருந்து, பிறவியிலேயே மாற்றுத்திறனாளியாக இருக்கும் 16 வயது நிக்கோலாஸ் தனக்கு எழுதிய கடிதத்தையும் தன்னோடு எடுத்துச் சென்றிருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் அங்கிருந்த அனைவருக்கும் தனது ஆசீரை அளித்தார். அது முடிந்ததும் அங்கிருந்தவர்கள் ‘திருத்தந்தையே! நீர் நீடூழி வாழ்க!’ என்று உரக்கச் சொல்லிக் கைகளை உரக்கத் தட்டினர். அந்நிறுவனத்தின் பால்கனியிலிருந்து வெளியில் நின்றுகொண்டிருந்த மக்களை வாழ்த்தினார் திருத்தந்தை. அந்நிறுவனத்திலுள்ள சிறார், இளையோர் மற்றும் பணியாளருக்காகச் செபிக்கக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, தனக்காகவும் எப்பொழுதும் செபிக்கவும் கேட்டுக்கொண்டார்.
அசிசி நகருக்கான இந்த முதல் திருப்பயணத்தில் முதல் பயணத்திட்டமாக மாற்றுத்திறனாளிச் சிறாரையும், மாற்றுத்திறனாளி இளையோரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தது, அவர் இவர்கள்மீது கொண்டிருக்கும் பரிவையும் அன்பையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
இச்சந்திப்பை முடித்து அசிசி நகர் புனித தமியான் ஆலயம் சென்று செபித்தார் திருத்தந்தை. இவ்வாலயத்திலிருந்து வெளியே வந்தபோது எண்ணற்ற திருப்பயணிகள் அவருக்காகக் காத்திருந்தனர். அவர்களையும் வாழ்த்தினார் திருத்தந்தை. அசிசியில், புனித தமியான் ஆலயம் மற்றும் துறவு இல்லம் இருக்கும் இவ்விடத்தில்தான் புனித பிரான்சிஸ் தனது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்திய அற்புத அழைப்பை இயேசுவிடமிருந்து கேட்டார். இவ்விடத்தில் 1030ம் ஆண்டிலிருந்து பெனடிக்ட் துறவு சபை இல்லம் இருந்தது.
குழம்பிப்போயிருந்த இளைஞர் பிரான்சிஸ் 1205ம் ஆண்டில் இங்கிருந்த திருச்சிலுவையின் முன்பாகச் செபித்தார். திடீரென அச்சிலுவைக்கு உயிர் வந்ததுபோல் அவரிடம், “எனது திருஅவையைக் கட்டு” என்று பேசியது. இந்த வாக்கை அப்படியே எடுத்துக்கொண்ட புனித பிரான்சிஸ் அந்தச்சிறிய ஆலயத்தைத் தனது கரங்களால் சீரமைக்கத் தொடங்கினார். பின்னாளில் இவ்விடம், புனித பிரான்சிசுக்கும் அவரது துறவியருக்கும் மிகவும் விருப்பமான தியான இடமாக மாறியது. இங்குதான் புனித பிரான்சிஸ் படைப்புக்கள் பற்றிய புகழ்பெற்ற பாடலின் முதல் தொகுப்பை எழுதினார்.
புனித பிரான்சிசின் சீடரும், அவரது நண்பருமாகிய புனித கிளாரா, இங்குதான் 1212ம் ஆண்டில் ஏழை கிளாரா துறவு சபையை ஆரம்பித்தார். இங்குதான் 1253ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி புனித கிளாரா இறந்தார். சில ஆண்டுகள் கழித்து புனித கிளாராவின் உடல் புனித கிளாரா பசிலிக்காவுக்கு மாற்றப்பட்டது.
புனித தமியான் ஆலயம் சென்று செபித்த பின்னர் அசிசி நகரின் ஆயரில்லம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித பிரான்சிஸ், 800 ஆண்டுகளுக்கு முன்னர் துறவறம் மேற்கொண்டபோது, தனது பணக்காரத் தந்தையின் பாதங்களில் உடைகளைக் கழற்றிக் கொடுத்த அறை அந்த ஆயரில்லத்திலுள்ளது. அவ்வறையில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்களும் திருஅவையும் உலகப்போக்கினின்று தங்களைக் களைய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
ஆயரில்லத்திலிருந்து புனித பிரான்சிஸ் கல்லறை இருக்கும் பசிலிக்கா சென்று அக்கல்லறையில் ரோஜா மலர்களைக் காணிக்கையாக அர்ப்பணித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்குச் சிறிதுநேரம் செபித்த பின்னர் அப்பசிலிக்காவின் முன்புறம் இருக்கும் வளாகத்தில் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை.
இவ்வெள்ளி, இத்தாலியின் பாதுகாவலரான அசிசி நகர் புனித பிரான்சிஸ் விழா. இவ்விழாவுக்கெனவும், அசிசிக்குத் திருத்தந்தை திருப்பயணம் மேற்கொண்டதற்கு அவரை நேரில் பார்த்து நன்றி சொல்லவும் இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளமென அங்குத் திரண்டிருந்தனர். புனித பிரான்சிசை திருஅவைக்குக் கொடையாகப் பெற்றதற்கு நன்றி சொல்ல இங்கு வந்துள்ள இந்த எண்ணற்ற திருப்பயணிகளைப் போலவே நானும் ஒரு திருப்பயணியாக இங்கு இன்று வந்திருக்கிறேன் என்று மறையுரையைத் தொடங்கினார் திருத்தந்தை.
பத்திரிகை நிருபர்களுக்கும் திருத்தந்தை நன்றி தெரிவித்தார்.
இத்திருப்பலி முடிந்து அனைவரையும் ஆசீர்வதித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பிற்பகல் 2.30 மணிக்கு புனித பிரான்சிஸ் சிறைவைக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார் திருத்தந்தை. பின்னர் புனித ரூஃபினோ பேராலயம் மற்றும் புனித கிளாரா பசிலிக்கா செல்லுதல், உம்ப்ரியா மாநில இளையோரைச் சந்தித்தல் போன்றவை இந்நாளையப் பயணத்திட்டத்தில் இருந்தன.
அன்பர்களே, உலகில் அமைதி நிலவச் செபிப்போம். நாம் அமைதியின், நல்லிணக்கத்தின் கருவிகளாக வாழ்வோம்.