முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் ‘உலகில் அமைதி’ (Pacem in Terris) என்ற சுற்றுமடலை வெளியிட்ட 50ம் ஆண்டில், அவர் புனிதராக அறிவிக்கப்பட்ட செய்தி வெளியாகியிருப்பது இறைவனின் திருவுளம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அக்டோபர் 2, இப்புதன் முதல், அக்டோபர் 4 இவ்வெள்ளி முடிய உரோம் நகரில் நடைபெற்றுவரும் ‘உலகில் அமைதி’ கருத்தரங்கில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களை இவ்வியாழன் மதியம் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், வல்லரசுகள் மத்தியில் உருவாகியிருந்த போர்ச் சூழலை எளிதாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, அமைதி எண்ணங்களை உலகில் வித்திட்டார் என்றும், அவ்வெண்ணங்களை இன்னும் ஆழமாக உலகில் பதித்தவர் முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான்பால் என்றும் திருத்தந்தை தன் உரையில் கூறினார்.
மனிதர்களின் ஆரம்பம் இறைமைத் தன்மை கொண்டுள்ளது என்பதால், மனிதத்தை மதிப்பதன் வழியாக இவ்வுலகில் அமைதியைக் கொணர முடியும் என்ற கருத்தை ‘உலகில் அமைதி’ சுற்றுமடல் வலியுறுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக் காட்டினார்.
ஒவ்வொரு மனித உள்ளத்திலும் ஊற்றெடுக்கும் அமைதி, வெளியுலகில் முன்னேற்றங்களைக் கொணர்வதற்கும், சரிந்துவரும் பொருளாதாரத்தை மீண்டும் உயர்த்துவதற்கும் உதவியாக அமையும் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அமைதி என்ற உயரிய விழுமியத்தை வளரும் தலைமுறையினர் புரிந்துகொள்ள கல்வியே சிறந்த வழி என்பதை உணர்ந்து, இக்கருத்தரங்கில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதைக் கண்டு மகிழ்கிறேன் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் கூறினார்.