திருஅவை தனது உலகப்போக்கைக் களைய வேண்டுமென்று அழைப்புவிடுப்பதற்கு இந்நாள் நல்ல தருணமாக இருக்கின்றது. திருமுழுக்குப் பெற்ற அனைவரும் திருஅவையாக இருக்கிறோம்.
திருஅவையிலுள்ள நாம் அனைவரும், சிலுவைப் பாதையில் இகழப்படத் தன்னையே கையளித்த மற்றும் ஊழியராக மாறிய இயேசுவை பின்செல்ல வேண்டும். நாம் கிறிஸ்தவர்களாக இருக்க விரும்பினால் இப்பாதையைத் தவிர வேறு வழியில்லை. சிலுவையின்றி, இயேசு இன்றி, உலகப்போக்கைக் களைவது இன்றி நாம் இனிப்புகளும் ரொட்டியும் தயாரிக்கும் கடைக்காரக் கிறிஸ்தவர்களாக, அதாவது சுவையான இனிப்புப் பொருள்கள் போல மாறுகிறோம். ஆனால் உண்மையான கிறிஸ்தவர்களாக அல்ல. திருஅவையை நாம் உலகப்போக்கினின்று வெளிக்கொணர வேண்டிய தேவை உள்ளது.
கடவுளுக்கு ஒவ்வாத அனைத்துச் செயல்களையும் நாம் களைய வேண்டும். நம்மைச் சந்திக்கவரும் அனைவருக்கும், குறிப்பாக, ஏழைகள், தேவையில் இருப்போர், தொலைவில் இருப்போர் அனைவருக்கும் நம் கதவுகளைத் திறப்பதற்குப் பயப்படுவதிலிருந்து நாம் வெளிவர வேண்டும். நாம் மிகுந்த கடும் ஆபத்தில் இருக்கிறோம். நாம் உலகப்போக்கின் ஆபத்தில் இருக்கிறோம். வீண் ஆடம்பரம், ஆணவம், தற்பெருமை ஆகியவற்றுக்கு இட்டுச்செல்லும் உலகின் உணர்வுகளில் திருஅவை நுழைய முடியாது. இவை மாபெரும் பாவமாகிய சிலைவழிபாட்டுக்கு இட்டுச்செல்லும்.
வெறும் அருள்பணியாளர்கள், ஆயர்கள், துறவிகள் ஆகியோரைமட்டும் உள்ளடக்கியது அல்ல திருஅவை. அது நம் அனைவருக்கும் உரியது. நாம் அனைவரும் இந்த உலகப்போக்கினின்று நம்மைக் களைய வேண்டும். உலகப்போக்கு நமக்குத் தீமையைக் கொணரும். உலகப்போக்குகொண்ட கிறிஸ்தவரைப் பார்ப்பது மிகவும் கவலையாக இருக்கிறது. நாம் இரு தலைவர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என்று நம் ஆண்டவர் சொல்லியிருக்கிறார். பணத்துக்கு அல்லது கடவுளுக்கு ஊழியம் செய்ய வேண்டும். மற்றொரு கையால் நாம் எழுதுவதை அதே கையால் அழிக்க முடியாது.
நற்செய்தி நற்செய்தியே. வேலை கொடுக்காத, உதவி செய்யாத, சிறார் பசியால் இறக்கும்போது கவலைப்படாத, உண்பதற்கு உணவில்லாமலும், உணவு வாங்குவதற்குப் பணம் இல்லாமலும் இருக்கும் பல குடும்பங்கள் குறித்து கவலைப்படாத ஓர் உலகால் உங்களில் பலர் கிழிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
இவ்வாறு உரையாற்றிக்கொண்டுவந்த திருத்தந்தை பிரான்சிஸ், இவ்வியாழனன்று இத்தாலியின் லாம்ப்பெதுசா தீவில் கப்பல் சேதமடைந்ததில் இறந்த நூற்றுக்கணக்கான அகதிகள் பற்றிக் குறிப்பிட்டு தங்களது தாய் நாடுகளில் கஷ்டமான சூழல்களிலிருந்து தப்பிப்பதற்காக முயற்சித்த இவர்கள் பெருமெண்ணிக்கையில் இறந்தது குறித்த கவலையை வெளிப்படுத்தினார்.
ஒரு கிறிஸ்தவர் உலகப்போக்கைப் பின்செல்ல விரும்புவது முட்டாள்தனமானது, உலகாயுத உணர்வு மக்களையும், திருஅவையையும் கொலை செய்கிறது. இந்தப் போக்கு சமுதாயத்தின் தொழுநோய், ஒரு புற்றுநோய், இறைவெளிப்பாட்டின் புற்றுநோய், இயேசுவின் எதிரி. இவ்வாறு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்கள் இந்த உலகப்போக்கு உணர்விலிருந்து வெளிவருவதற்குத் துணிச்சல் பெறுமாறு இயேசுவிடம் செபித்து உரையை நிறைவு செய்தார். இவ்வாறு நாம் செயல்பட கிறிஸ்துவே நமது பலமாக இருக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.