வில்லியனூர் மாதா திருத்தல வரலாறு

Villanur madha jpgதென்னிந்தியாவில் தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கும் வில்லியனூர் எழில் கொஞ்சும் மரங்கள்… தோப்புகள்… பரந்து விரிந்த வயல்வெளிகள் நிறைந்த அழகிய சிற்×ராகும்…

பழமைவாய்ந்த திருக்காமேஸ்ரவர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்கள் போன்றவை அமைந்திருக்கும் இந்த ஊரில் கிறிஸ்தவர்களுக்கென்று ஆலயம் அமைந்திருக்கவில்லை என்பதால் புதுச்சேரியில் அப்போதிருந்த மறைபோதக சபையினர் வில்லியனூரில் ஆலயம் அமைக்க வேண்டி சிறு நிலத்தினை கடந்த 1867ம் ஆண்டு விலைக்கு வாங்கினர்.

இந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்போவதை அறிந்த சிலர் வழக்கம்போல் தங்கள் எதிர்ப்பினை தெரிவித்ததை தொடர்ந்து, பிரச்னைகள் மேற்கொண்டு ஏற்படாமலிருக்கும் வகையில் ஆலயம் கட்டும் பணியினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் புதுவையில் பிரபல மருத்துவ நிபுணரான லெப்பீன் துரை என்பவர் தனது குழந்தைக்கு ஏற்பட்ட கொடிய நோயிலிருந்து விடுவித்து உயிர்பிச்சை அளித்த தேவ அன்னைக்கு நன்றியாக பொருளுதவி செய்தார்.

இதனை பெற்றுக் கொண்ட அப்போதைய மறைபோதக சபையினர் வில்வநல்லூர் என்றழைக்கப்பட்ட வில்லியனூரில் தேவ அன்னைக்கு ஆலயம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, அதற்கான ஏற்பாடுகளிலும் தீவிரம் காட்டினர்.

கடந்த 1858ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள மசபியேல் குகையில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு காட்சி கொடுத்த அன்னை மரியாள், நானே அமலோற்பவம் என்றதுடன், தனக்கு ஒரு கோவில் கட்டும்படி கூறியதன் தொடர்ச்சியாகவே லூர்துவில் புகழ்மிக்க ஆலயம் அமைந்திருக்கிறது என்பது நமக்கு தெரிந்திருக்கும்..

இதுபோன்ற காலகட்டத்தில்தான் வில்லியனூரில் கிறிஸ்தவ மிஷனுக்கு சொந்தமான நிலத்தில் லூர்து மாதா பெயரில் கன்னி மரியாளுக்கு மருத்துவர் லெப்பீன் கொடுத்திருந்த தொகையினை கொண்டு ஆலயத்தை கட்ட துவங்கினர். இதற்கு அப்போதிருந்த சிலரால் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கணுவாப்பேட்டை என்ற கிராமத்தில் வில்லியனூர் திருக்காமேஸ்ரவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை பணம் கொடுத்து வாங்கி முறைப்படி பதிவும் செய்து கொண்டனர்.

இதற்கு பின்னர் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த போதிலும், தேவ அன்னைக்கு ஆலயம் கட்டுவற்கான பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆலயத்தை கட்டுவதற்குரிய பொருளதவியை பெறுவதில் கிறிஸ்தவ பெரியோர்களும், மறைபோதக சபையினரும் அதிக தீவிரம் காட்டினர்.

ஆனால், போதுமான நிதியுதவி இல்லை என்பதால் ஆரம்பத்தில் சிலுவை கோவிலாக கட்டப்பட்டாலும், பொருளுதவி மற்றும் ஒத்துழைப்பின்மை காரணமாக கட்டுமான பணிகள் மீண்டும் மீண்டும் தொய்வடைய துவங்கியது.

இதுபோன்ற சூழ்நிலையில், புதுச்சேரியில் ஏழைகளுக்கு தாராளமாய் உதவி செய்து வந்த புண்ணியவதி ஒருவர், வில்லியனூரில் அமைய உள்ள ஆலயத்திற்கு லூர்தன்னையின் சொரூபம் வாங்கி வைக்க எண்ணியதுடன், அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டார்.

1877ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி ஆலயத்தின் கட்டுமான வேலைகள் முடிவடைவதற்கு முன்பாகவே பிரான்ஸ் நாட்டில் இருந்து பெரிய பெட்டியில் லூர்து அன்னையின் சொரூபம் கப்பல் மூலமாக புதுச்சேரிக்கு கொண்டு கொண்டு வரப்பட்டதுடன், மிஷனுக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.

கப்பலில் இருந்து அன்னையின் சொரூபத்தை இறக்கியபோது அது மூன்று முறை கீழே விழுந்தபோதிலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென்பது முதல் புதுமையாகவே அமைந்திருந்தது.

இதற்குபின்னர் குறிப்பிட்ட ஒருநாளில் அப்போதிருந்த பேராயர் லவுணான் ஆண்டகை அவர்கள் லூர்து மாதா சொரூபத்தினை அர்ச்சித்து புனிதப்படுத்த, புதுச்சேரியில் உள்ள மக்கள் மூன்று நாட்கள் தரிசிக்கும் வகையில் அன்னை சொரூபத்தை மலர்களால் அலங்கரித்து பார்வைக்கு வைத்திருந்தனர்.

இதனிடையே 1877ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு ராணுவ இசைக்கருவிகள் முழங்க, வாண வெடிகள் அதிர, பவனியாக வில்லியனூருக்கு கொண்டு செல்லப்பட்டபோது நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம் கிறிஸ்தவர்கள் தேவ அன்னைக்கு பிரமாண்டமாய் வரவேற்பளித்து தங்கள் உற்சாகத்தினை வெளிப்படுத்தினர்.

தற்பொது அருமார்த்தபுரம் என்றழைக்கப்படும் அருமார்த்த பிள்ளைச்சாவடியிலிருந்து சுல்தான்பேட்டை வழியாக வில்லியனூருக்கு தேவ அன்னையின் சொரூபம் கொண்டு செல்லப்படவிருந்த நிலையில் ஒருசிலரின் எதிர்ப்பு இருதரப்பினரிடையே கலகமாக வெடிக்க, தேவ அன்னையின் சொரூபம் தானாக திரும்பி வேறு வழியை காட்டியது.

தற்போது வி. மணவெளி என்றழைக்கப்படும் பகுதி அப்போது குறுகிய பாதையாக இருந்தபோதிலும் அவ்வழியாக மாதா சொரூபம் பவனியாக கொண்டு செல்லப்பட்டு, கணுவாப்பேட்டை என்ற இடத்தில் பக்தர்களின் பார்வைக்காக பந்தலில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு பின்னர், ஆலயத்தின் பீடத்தில் அருட்தந்தை. குய்யோன் தாவீது நாதர் அவர்களால் தேவஅன்னையின் சொரூபம் தூக்கி நிலைநிறுத்தபட்டது.

1877ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி புதுச்சேரியின் பேராயர் மேதகு லெவணான் ஆண்டகை அவர்கள் திருமுறை ஒழுக்கங்களை நிறைவேற்ற, அழகுமிகுந்த அன்னையின் சொரூபத்தை அர்ச்சித்து கெபியில் அரியணையேற்றினார்.

கடந்த 1885ம் ஆண்டு பேராயர் லெவணான் ஆண்டகை ரோமாபுரி சென்றபோது, அப்போதிருந்த போப்பாண்டவர் 13ம் சிங்கராயரிடம் வில்லியனூரில் நடைபெறும் அற்புத அதிசயங்களை எடுத்துச் சொல்லி வில்லியனூர் புனித லூர்தன்னைக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டதையடுத்து வில்லியனூர் அன்னைக்கு முடிசூட்டுவதற்கான உத்தரவினை 1886ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி போப்பாண்டவர் 13ம் சிங்கராயர் வழங்கினார்.

இதனை தொடர்ந்து வில்லியனூர் லூர்தன்னைக்கு திருமுடி சூட்டப்பட்டதுடன், திருத்தலமாகவும் உயர்த்தப்பட்டது. ஆசிய கண்டத்திலேயே சில சொரூபங்கள்தான் போப்பாண்டவரின் பெயரில் முடிசூட்டப்பட்டுள்ளன. அவற்றில் வில்லியனூரில் அமைந்துள்ள புனித லூர்தன்னை சொரூபமும் ஒன்றாகும்.

அன்று முதல் இன்று வரை வில்லியனூர் திருத்தலத்தின் பீடத்தில் வீற்றிருக்கும் அன்னை மரியாள் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு எண்ணிலடங்கா புதுமைகளை செய்து வருகிறார்.

>லூர்து நகரில் தேவ அன்னை காட்சி கொடுத்த பிறகு கட்டப்பட்ட கோவிலுக்கு பின்னர் உலகிலேயே முதல்முறையாக லூர்து மாதா பெயரில் கோவிலும் கெபியும் கட்டப்பட்டுள்ள வில்லியனூரில், பிரான்ஸ் தேசத்தில் அன்னை மரியாள் காட்சி கொடுத்த மசபியேல் குகையில் இருந்து ஒரு சிறிய கல் துண்டு பேராயர் வெண்மணி செல்வநாதர் ஆண்டகையின் முயற்சியால் ஆலய பீடத்தின் இடதுபும் உள்ள சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இன்றும் நாம் காண முடியும்..

இப்படிப்பட்ட அன்னையின் சொரூபம் லூர்து நகரில் காட்சிகளை பெற்ற புனித பெர்னதெத்தின் நேரடி பார்வையில் தயாரிக்கப்பட்டு, அவரது உறவினரான தார்ப்ஸ் அடிகளாரின் முயற்சியால் அரியணை ஏற்றப்பட்டது பெருமைக்குரிய விஷயமாகும்.

vlr church

மாதா குளம்

ஆசிய கண்டத்திலேயே தமிழர் பண்பாட்டின்படி ஆலயத்தின் எதிரே குளம் அமைந்திருப்பது இந்தியாவில் உள்ள வில்லியனூரில் மட்டும்தான் என்பது இந்த திருத்தலத்திற்கு கிடைத்துள்ள பெருமைகளில் முக்கியமானதாகும்…

இன்று நீங்கள் பார்க்கும் இந்த குளத்தின் கரைகள் ஆரம்ப காலங்களில் கற்களால்தான் கட்டப்பட்டிருந்தது. இதன்பின்னர்தான் 1923ம் ஆண்டு வில்லியனூர் லூர்தன்னை திருத்தலத்தின் பங்கு தந்தையாக இருந்த லெஸ்போன் அடிகளார் அவர்கள், தனது தீவிர முயற்சியால் குளத்தை சுற்றி செங்கற்களை கொண்டு சுவர்கள் அமைத்தார்.

1924ம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்த பக்தர்கள் கொடுத்த பொருளுதவியை கொண்டு பிரான்ஸ் நாட்டில் இருந்து லூர்து அன்னையின் சொரூபம் வரவழைக்கப்பட்டு குளத்தின் மைய பகுதியில் உள்ள தூண் மீது வைக்கப்பட்டது. இன்றைக்கும் குளத்தில் உள்ள நம் அன்னை… தன்னை நாடி வருவோருக்கு எண்ணிலடங்கா தேவஆசீரை தந்து பிணிகளை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் மாதா காட்சி கொடுத்தபோது உற்பத்தியான ஊற்றில் இருந்து கிடைக்கப்பெறும் புனிதநீர் இந்த குளத்தில் ஆண்டுதோறும் கலக்கப்படுகிறது. இந்த குளத்தின் புனித நீரினை உபயோகித்து நோய்களில் இருந்து குணமானவர்கள், லூர்தன்னையை கண்கொடுத்த அன்னை என்று போற்றி புகழ்கிறார்கள்.

புனிதம் கொண்ட மாதா குளத்தை சுற்றி முழங்காலிட்டு சுற்றி வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையின் காரணமாக, பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக குளத்தை சுற்றி முழங்காலிட்டு சுற்றி வருவது அன்னையின் மீதான நம்பிக்கையை உறுதிபடுத்துகிறது.

திருத்தல சிறப்புகள்

வில்லியனூர் புனித லூர்தன்னை திருத்தலத்தின் சிறப்பாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் புதுவையில் இருந்து பாதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. 1977ம் ஆண்டு புயலினால் புதுவைக்கு மாபெரும் பேரழிவு ஏற்படுமென்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தபோது, அப்போதிருந்த பேராயர் வெண்மணி செல்வநாதர் ஆண்டகை அவர்கள், புயலில் இருந்து புதுவையை காப்பாற்ற தேவஅன்னையிடம் ஜெபிக்கும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

புயலில் இருந்து காப்பாற்றப்பட்டால் வில்லியனூருக்கு பாதயாத்திரையாக வந்து நன்றிசெலுத்துவோம் என்றும் வாக்கு கொடுத்தார். இதனால் புதுவையை தாக்கவிருந்த புயல் வேறு இடம் நகர்ந்ததின் விளைவாக மக்கள் காப்பாற்றப்பட்டதையொட்டி, 1977ம் ஆண்டு முதல் பாதயாத்திரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் புதுவை நகர மக்கள் திரளாக கலந்து கொள்வது மாநிலத்தின் நிகழ்வுகளில் முக்கியமாக கருதப்படுகிறது.

வில்லியனூர் புனித லூர்தன்னை ஆலயம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுபெற்றதன் அடையாளமாக ஜெபக்கூடம் கட்டப்பட்டு கடந்த 1978ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி திருநிலைப்படுத்தப்பட்டது. இங்கு வீற்றிருக்கும் தேவ அன்னையின் சொரூபமும் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டதாகும்.

>லூர்து நகரில் தேவஅன்னையின் காட்சியை பெற்ற புனித பெர்னதெத் மரணமடைந்து 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதன் நினைவாக திருத்தலத்தினுள் பாடுபட்ட சொரூபம் நடப்பட்டதுடன், ஆலய வளாகத்தினுள் ஜெபக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

மாதா குளத்தை சுற்றி ஆரம்ப நாட்களில் இருந்து சிலுவை பாதை படங்கள் அகற்றப்பட்டு, தற்போது இயேசுவின் பாடுகளை உணர்த்தும் நிலைகள் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது. மாதா குளத்தை சுற்றி வேண்டுபவர்களின் பக்தி முயற்சியை அதிகப்படுத்தும் வகையில் இந்த சிலுவை பாதை சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளது.

வில்லியனூர் மாதா திருத்தல தோற்றத்தில் முக்கிய அம்சமாக இருப்பது ஆலய கடிகாரம்தான். பெல்ஜியம் நாட்டு வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட இந்த ஆலய கடிகாரம் கடந்த 1908ம் ஆண்டு நிறுவப்பட்டு இன்று வரை இயங்கி வருவதுடன், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை, அதன்பின்னர் 5 நிமிட இடைவெளிக்கு பின்னர் மறுமுறை என ஒலித்து திருத்தலத்திற்கு பெருமை சர்த்து வருகிறது.

வில்லியனூர் லூர்தன்னை திருத்தலம், மாதா குளம், ஜெபக்கூடம், பங்குதந்தை அறையின் முன்புற பகுதி மற்றும் தேரில் எடுத்துச் செல்லப்படும் மாதா சொரூபங்கள் அனைத்துமே பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்….

 

VILLIANUR MADHA CHURCH DOCUMENTARY VIDEOS

VILLIANUR MADHA DOCUMENTARY

VILLIANUR MADHA CHURCH – LOURDES VISION

VILLIANUR MADHA KULAM

VILLIANUR MADHA CHURCH YATRA

VILLIANUR MADHA PRAYER

VILLIANUR MADHA CHURCH CAR FESTIVAL – ST.BERNARD PRAYER

 

2 thoughts on “வில்லியனூர் மாதா திருத்தல வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *