ராமேஸ்வரம்: நீதிமன்றம் விதித்த தடையை தகர்த்து, தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் திருவிழா சிறப்பாக நடந்தது.
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடம் வேர்க்காட்டில் புனித சந்தியாகப்பர் திருத்தலம் அமைந்துள்ளது. தீவு மக்களால் தங்களின் பாதுகாவலர் என அழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் திருத்தலத்தில் மத, சமுதாய வேறுபாடுகளை கடந்து அனைத்து மக்களும் வழிபடுவது வழக்கம். இங்கு ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து திருப்பலி நடந்தது.
ராமேஸ்வரம் தீவில் உள்ள சில தேவாலயங்களுக்கு சொந்தமான சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பாக சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகத்திற்கும், ராமேஸ்வரம் தீவு பூர்வீக கிறிஸ்தவர்களுக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது. இதனால் இம்மக்கள் நடத்தும் திருவிழாக்களில் மறைமாவட்டத்தை சேர்ந்த பாதிரியார்கள் பங்கேற்பதில்லை.
இதையடுத்து பாதிரியார்களுக்கு ஆதரவான சில கிறிஸ்தவர்கள், சந்தியாகப்பர் கோயில் திருவிழாவினை கொண்டாட தடை கோரி ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். கொடியேற்றம் நடந்து முடிந்த நிலையில், நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. இதனால் திருவிழாவின் நவநாட்களில் நடக்க வேண்டிய திருப்பலிகள் தடைபட்டது.
இந்நிலையில், பூர்வீக கிறிஸ்தவ அமைப்பினர் ராமேஸ்வரம் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக தடை பெற்றனர். இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட திருப்பலிகள் மீண்டும் நடந்தன. இந்நிலையில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித சந்தியாகப்பர் மற்றும் அன்னை மரியாளின் உருவங்கள் வைக்கப்பட்டு தேர் பவனி நடந்தது.
இதனை தொடர்ந்து மதுரையை சேர்ந்த பாதிரியார் அற்புதராஜ் திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார். இந்த நிகழ்வுகளில் தீவு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்களும், வெளியூரை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்களும் கலந்து கொண்டனர்.
திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை எழுந்ததால், வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.