உலகம் இதுவரை அறிந்திராத பெரிய தலைமுறை உங்கள் தலைமுறை என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலர் பான் கி மூன், ஐ.நா.வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலகளாவிய இளையோருக்கான கலந்துரையாடலில் பங்குபெற்ற இளையோரிடம் கூறினார்.
இதற்கு முன்னதாக இளையோருக்கான ஐ.நா.வின் இணையதளத்தை அதன் சிறப்பு தூதர் அகமத் உடன் இணைந்து துவக்கி வைத்த பான் கி மூன், இந்த இணையதளத்தின் மூலம் இளையோர் தங்கள் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ள துணையாக இருக்கும் என்று கூறினார்.
பான் கி மூனின் ஐந்தாண்டு திட்டத்தில் இளையோருக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு முன்னுரிமைக் கொடுத்துள்ளார். அதற்காக இவ்வாண்டு தொடக்கத்தில் முதன்முதலாக இளையோருக்கென சிறப்புத் தூதராக அகமத் அல்ஹேண்டவி (Ahmad Alhendawi) என்பவரை அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “உங்களிடம் தகவல் பரிமாற்றத்திற்கான கருவிகள் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளன. அதைப்போலவே, வளர்ந்துவரும் ஏற்றத்தாழ்வுகளும், குறைந்துவரும் வாய்ப்புகளும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
எல்லோருக்கும் கண்ணியத்தோடுகூடிய சமமான மற்றும் நிலையான எதிர்காலத்தை ஏற்படுத்த இளையோரால் எந்த அளவுக்குப் பங்களிக்க முடியும் என்பதை ஆராய அவர்களோடு இணைந்து பணிசெய்ய தான் உறுதி கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் பான் கி மூன்.
இத்திட்டமானது இவ்வாண்டு தொடக்கத்தில் உலகளவில் ஆயிரக்கணக்கான இளையோரிடம் தான் மேற்கொண்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த ஆய்வில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில், அரசியல், உரிமைகள் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய ஐந்து பகுதிகள் உள்ளடக்கியிருந்ததாகவும் பான் கி மூன் கூறினார்.
ஆதாரம் : UN