You are here: Home // திருஅவை செய்திகள் // மன்னிப்பு, உரையாடல், ஒப்புரவு ஆகியவையே அமைதியின் வார்த்தைகளாகும்

மன்னிப்பு, உரையாடல், ஒப்புரவு ஆகியவையே அமைதியின் வார்த்தைகளாகும்

llசிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அமைதி நிலவ இச்சனிக்கிழமை இரவு 7 மணியிலிருந்து 11 மணிவரை செப வழிபாடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடந்தது. இதில் இஸ்லாம் மதப் பிரதிநிதிகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். வத்திக்கான் பேதுரு வளாகம் நிறைந்திருந்தது. இவ்வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய மறையுரை…..

“கடவுள் அது நல்லது என்று கண்டார்” (தொ.நூல் 1:12,18,21,25). கடவுள் தமது படைப்பைப் பார்த்து, அதை தியானிக்கும் உணர்வில் “அது நல்லது” என்று கூறியதை, உலக மற்றும் மனித சமுதாயத்தின் வரலாற்றின் தொடக்கம் பற்றிக் கூறும் விவிலியப் பகுதி நமக்குக் கூறுகிறது. இது நம்மை கடவுளின் இதயத்தில் நுழைய வைக்கிறது. நாம் கடவுளின் இச்செய்தியை அவரிடமிருந்தே பெறுகிறோம். இச்செய்தி நமக்குச் சொல்வதென்ன? இது, எனக்கு, உங்களுக்கு, நம் எல்லாருக்கும் சொல்வதென்ன? என்று நாம் கேட்க வேண்டும்.

கடவுளின் மனத்திலும் இதயத்திலும் நமது உலகம் நல்லிணக்கம் மற்றும் அமைதியின் இல்லம் என்பதை இச்செய்தி நமக்குச் சொல்கின்றது. நமது உலகம் “நல்லது” என்பதால் உலகினர் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய இடத்தைக் கண்டுபிடித்து அதை வீடு போன்று உணர முடிகின்றது.

படைப்பனைத்தும் முரண்பாடில்லாத மற்றும் நல்ல ஒற்றுமையை அமைக்கிறது. இதிலும், கடவுளின் சாயலாகவும் பாவனையாகவும் உருவாக்கப்பட்ட மனித சமுதாயம் ஒரே குடும்பமாக உள்ளது. இக்குடும்பத்தில் உண்மையான சகோதரத்துவம், வார்த்தைகளால் மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் அடுத்தவரை தனது சகோதர சகோதரியாக நினைத்து அன்புகூரப்படுகின்றது. கடவுளின் உலகம் என்பது ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு, அடுத்தவரின் நலனுக்குப் பொறுப்பானவர் என்பதை உணரும் உலகம். நான் உண்மையிலேயே விரும்பும் உலகம் இதுதானா? என்று, நோன்பு மற்றும் செபம் செய்யும் இந்த மாலைப்பொழுதில் நம் இதயத்தின் ஆழத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்மையே கேட்க வேண்டும்.

நாம் அனைவரும் நம் இதயத்தில் தாங்கும் உலகம் உண்மையிலேயே இதுதானா? நம்மிலும், நாம் பிறரோடு கொள்ளும் உறவுகளிலும், குடும்பங்களிலும், நகரங்களிலும், நாடுகளிலும், நாடுகளுக்கு இடையேயும் நாம் விரும்பும் நல்லிணக்க மற்றும் அமைதியான உலகம் இந்த உலகமா? அனைவரின் நன்மைக்கு இட்டுச்செல்கின்ற மற்றும் அன்பினால் வழிநடத்தப்படும் உலகத்தில் பாதைகளைத் தேர்ந்தெடுப்பதல்லவா உண்மையான சுதந்திரம்!

1_0_719929நாம் இந்த உலகத்திலா வாழ்கிறோம் என்று நாம் வியப்படைகிறோம். படைப்பு தனது அழகை உறுதியாய் வைத்திருக்கின்றது. இது நம்மை நிரப்புகிறது. ஆயினும், வன்முறையும், பிரிவினையும், முரண்பாடும் போரும் இவ்வுலகில் இருக்கின்றன. படைப்பின் சிகரமான மனிதர் படைப்பின் அழகையும் நன்மைத்தனத்தையும் தியானிப்பதை நிறுத்தும்போதும், தனது தன்னலத்துக்குள் நுழையும்போதும் இவை நடக்கின்றன.

மனிதர் தன்னைப்பற்றி மட்டுமே, தனது சொந்த ஆதாயங்களை மட்டுமே நினைக்கும்போதும், தன்னை மையப்படுத்தும்போதும், ஆட்சி அதிகாரச் சிலைகளால் கவரப்படுவதற்குத் தன்னை அனுமதிக்கும்போதும், கடவுளின் இடத்தில் தன்னை வைக்கும்போதும் எல்லா உறவுகளும் முறிந்து விடுகின்றன, அனைத்தும் பாழ்படுத்தப்படுகின்றது. பின்னர் வன்முறைக்கும், புறக்கணிப்புக்கும், போருக்கும் கதவு திறக்கப்படுகின்றது. முதல் மனிதரின் வீழ்ச்சி பற்றிச் சொல்லும் தொடக்கநூல் பகுதி இதையே நமக்கு உணர்த்துகின்றது.

மனிதர் தன்னோடு மோதலில் நுழையும்போது தான் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்து கடவுளை நோக்குவதற்குப் பயந்து(தொ.நூல் 3:10) ஒளிந்து கொள்கிறார். மனிதர் பெண்ணைக் குறை சொல்கிறார். படைப்போடு கொண்டிருந்த நல்லுறவை இழக்கிறார். தன்னையே மறைக்கிறார். தனது சகோதரரைக் கொல்வதற்குத் தனது கையை ஓங்குகிறார். நல்லிணக்கத்திலிருந்து “ஒற்றுமைகேட்டுக்கு, நல்லிணக்கமின்மைக்கு” மனிதர் வருகின்றார் என்று நாம் சொல்லலாமா?
நல்லிணக்கமின்மை என்று எதுவுமில்லை.

நல்லிணக்கம் அல்லது பெருங்குழப்பத்தில் நாம் விழுகிறோம். பெருங்குழப்பத்தில் வன்முறை, விவாதம், போர், அச்சம் … இவை இருக்கின்றன.
இந்தப் பெருங்குழப்பத்தில் கடவுள் மனிதரின் மனசாட்சிக்கு கேள்வி எழுப்புகின்றார். ‘உனது சகோதரன் ஆபேல் எங்கே? என்று கடவுள் கேட்டதற்கு, காயின் ‘எனக்குத் தெரியாது, நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?’ என்று பதில் சொன்னார்(தொ.நூல்4:9). நான் உண்மையிலேயே என் சகோதரரின் காவலாளியா என்று நாம் நம்மையே கேட்பது நல்லது.

ஆம். நீங்கள் உங்கள் சகோதரருக்குக் காவலாளிதான்!. மனிதத்தோடு, மனிதராக இருப்பது என்பது ஒருவர் ஒருவர் நலனில் அக்கறை கொள்வதாகும். ஆனால், நல்லிணக்கம் உடைபடும்போது பண்புகள் மாறுபடுகின்றன. அக்கறையுடன் அன்புகூரப்படவேண்டிய சகோதரர் சண்டையிடவும், கொலைசெய்யவும் பகைவனாகின்றார். அந்நேரத்தில் என்னவகையான வன்முறை நிகழ்கின்றது, எத்தனை மோதல்கள், எத்தனை போர்கள் நம் வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. எண்ணற்ற சகோதர சகோதரிகள் அனுபவித்த துன்பங்களை நாம் நோக்க வேண்டும்.

இது சந்தர்ப்பத்தால் நடப்பதல்ல, இதுதான் உண்மை. ஒவ்வொரு வன்முறைச் செயலிலும், ஒவ்வொரு போரிலும் காயினின் மறுபிறப்பைக் கொண்டு வருகிறோம். ஆம். நாம் அனைவரும்! இன்றும் சகோதரருக்கு இடையேயான சண்டையின் வரலாறு தொடர்கிறது. இன்றும் நம் சகோதரருக்கு எதிராக நம் கைகளை ஓங்குகிறோம். இன்றும், தன்னலம், சொந்த ஆதாயங்கள் போன்ற சிலைகளால் வழிநடத்தப்பட நம்மை அனுமதிக்கிறோம். இந்தப் போக்கு இன்றும் இருக்கின்றது.

1_0_717844 நம் ஆயுதங்களை நிறைவுபடுத்தியிருக்கிறோம். நமது மனசாட்சி ஆழ்ந்து உறங்குகின்றது. நம்மை நியாயப்படுத்துவதற்கு நம் கருத்துக்களை கூர்மையாக்கியிருக்கிறோம். ஏதோ இது சாதாரணமாக நடப்பதுபோன்று அழிவையும், வேதனையையும் மரணத்தையும் தொடர்ந்து விதைத்துக்கொண்டிருக்கிறோம். வன்முறையும் போரும் மரணத்துக்கு மட்டுமே இட்டுச்செல்லும். அவை மரணத்தையே பேசும். வன்முறையும் போரும் மரணத்தின் மொழி.

இந்நேரத்தில் என்னையே கேட்கிறேன் இந்தப்போக்கை மாற்ற இயலுமா? என்று. சங்கிலித்தொடராக இடம்பெற்றுவரும் இந்த மரணத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் நாம் வெளியே வர இயலுமா? நாம் மீண்டும் அமைதியின் வழியில் நடந்து அதில் வாழ இயலுமா? அமைதியின் அரசியாகிய உரோம் மக்களின் அன்னைமரியின் தாய்மைக்குரிய பார்வையின்கீழ் கடவுளின் உதவியைக் கேட்பதால் இது இயலும் என்று நான் சொல்கிறேன். ஆம். இது ஒவ்வொருவருக்கும் இயலக்கூடியதே.

இன்று இரவு உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும், இது ஒவ்வொருவருக்கும் இயலக்கூடியதே என்று ஓங்கிக் குரல் எழுப்புவதை நான் கேட்க விரும்புகிறேன். இன்னும் இதைவிட மேலாக, அரசுகளை ஆள்பவர்கள் உட்பட சிறியவர் முதல் பெரியவர் வரை ஒவ்வொருவரும் ஆம். நாங்கள் விரும்புகிறோம் எனச் சொல்ல வேண்டுமென விழைகிறேன். எனது கிறிஸ்தவ விசுவாசம் திருச்சிலுவையை நோக்க வைக்கின்றது. அனைத்து நன்மனம் கொண்ட அனைவரும் ஒரு நிமிடம் திருச்சிலுவையைப் பார்க்க வேண்டுமென எவ்வளவு ஆவல் கொள்கிறேன்.

அதில் கடவுளின் பதிலைக் காணலாம். வன்முறை வன்முறையோடு பதில் சொல்லாது. மரணம், மரணத்தின் மொழியோடு பதில் சொல்லாது. திருச்சிலுவையின் மௌனத்தில் ஆயுதங்களின் பெரும்சப்தம் நிறுத்தப்படட்டும். ஒப்புரவு, மன்னிப்பு, உரையாடல், அமைதி ஆகியவற்றின் மொழி பேசப்படட்டும். இந்த இரவில் கிறிஸ்தவர்களாகிய நாமும், பிறமத நம் சகோதர சகோதரிகளும், நன்மனம் கொண்ட ஒவ்வொருவரும் மிகுந்த ஒலியெழுப்பிச் சொல்வோம்.

வன்முறையும் போரும் ஒருபோதும் அமைதிக்கான பாதை கிடையாது என்று உரக்கச் சொல்வோம். ஒவ்வொருவரும் மனசாட்சியின் ஆழத்துக்குச் சென்று இப்பொழுது சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்.

‘உங்கள் இதயத்தைக் கடினப்படுத்துமே சொந்த ஆதாயங்களைப் பின்னுக்குத் தள்ளுங்கள். உங்கள் இதயத்தைப் பிறர்மீது அக்கறையற்றவர்களாக ஆக்கும் புறக்கணிப்பை விட்டுவிலகுங்கள். உரையாடலுக்கும், ஒப்புரவுக்கும் உங்களைத் திறங்கள். உங்கள் சகோதர்ரின் துன்பங்களை நோக்குங்கள். அதனை மேலும் அதிகிரிக்காதீர்கள். அசைக்கப்ப்ட்டுள்ள நல்லிணக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள். இவை அனைத்தையும் மோதல்களால் அல்ல, மாறாக, பேச்சுவார்த்தையாலே சாதிக்க முடியும்’.

ஆயுதங்களின் சப்தம் முடிவடையட்டும். பிறருக்கு எதிராக மற்றுமொன்று வேண்டாம். திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் வார்த்தைகள் மீண்டும் ஒலிக்கட்டும். ஒருபோதும் மற்றுமொன்று வேண்டாம். போர் ஒருபோதும் மீண்டும், போர் ஒருபோதும் மீண்டும் வேண்டாம்.

அமைதி, அமைதியில் மட்டுமே தன்னை வெளிப்படுத்தும். அமைதி, நீதியின் கோரிக்கையிலிருந்து பிரிக்கப்பட முடியாதது. ஆனால் அது சுயதியாகம், மன்னிப்பு, கருணை, இரக்கம், அன்பு ஆகியவற்றிலிருந்து கிடைப்பது. மன்னிப்பு, உரையாடல், ஒப்புரவு ஆகிய இவையே அன்புமிக்க சிரியாவிலும், மத்திய கிழக்கிலும், உலகெங்கிலும் அமைதியின் வார்த்தைகளாகும். எனவே ஒப்புரவுக்காகவும், அமைதிக்காகவும் செபிப்போம். ஒப்புரவுக்காகவும், அமைதிக்காகவும் உழைப்போம். ஒவ்வோர் இடத்திலும் நாம் அனைவரும் ஒப்புரவு மற்றும் அமைதியின் ஆண்களும் பெண்களுமாக மாறுவோம். ஆமென்.

Tags: , ,

Leave a Reply

Time limit is exhausted. Please reload CAPTCHA.

Copyright © 2013 Tamil Christian Devotional TV Channel holycrosstv.com. All rights reserved.
By KM