கிறிஸ்தவரின் வாழ்வில் இயேசு கிறிஸ்துவே மையமாக இருக்க வேண்டும் என்பது ஒருபோதும் மறக்கப்படக்கூடாது என்று இச்சனிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு இல்லாமல் கிறிஸ்தவராய் இருப்பதன் சோதனையை வெல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், பக்திமுயற்சிகளைமட்டும் தேடும் கிறிஸ்தவராய் இருக்கும்போது அங்கே இயேசு இருக்கமாட்டார் என்றும் திருப்பலி மறையுரையில் கூறினார்.
கிறிஸ்தவரின் வாழ்வில் இயேசு கிறிஸ்து மையமாக இருக்க வேண்டும் என்பதை இந்நாளைய மறையுரையில் வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, இயேசு கிறிஸ்து நம் வாழ்வின் மையமாக இருந்து நம்மை புதுப்பிக்கிறார் மற்றும் நம்மை உருவாக்குகிறார் என்றும் தெரிவித்தார்.
நாம் இயேசுவோடு இருக்கிறோம் என்பதற்கு அடையாளம் என்னவென்ற கேள்வியையும் எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ், பிறவியிலேயே கண்பார்வையிழந்த மனிதர் போன்று, இயேசு முன்னர் மண்டியிட வேண்டும், அவரை நாம் வணங்க இயலவில்லையென்றால் நாம் எதையோ இழக்கிறோம் என்றும் மறையுரையில் கூறினார்.