சிரியா மீது நடத்தப்படும் இராணுவத் தாக்குதல்கள் யாரும் விரும்பும் பலன்களைக் கொண்டுவராது, மாறாக, அதில் ஒவ்வொருவருமே இழப்பவராக இருப்பார்கள், வெற்றி பெறுபவர்களாக யாருமே இருக்க மாட்டார்கள் என்று இயேசு சபை அகதிப்பணியின் தலைவர் எச்சரித்தார்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கப் பகுதிக்கான இயேசு சபை அகதிப்பணியின் இயக்குனர் அருள்பணியாளர் Nawras Sammour, Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்துக்கு, தமாஸ்கு நகரத்திலிருந்து அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
தமாஸ்கில் வாழும் ஒவ்வொருவரும் வெளிநாட்டு இராணுவத் தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்வதாகத் தெரிவித்த அருள்பணியாளர் Sammour, சிரியாவின் பிரச்சனைகள் வெளிநாட்டு இராணுவத் தாக்குதல்களால் தீர்க்கப்பட முடியாத சிக்கல் நிறைந்த பிரச்சனையாகும் என்றும், இதனால் யாரும் நீண்டகாலப் பலன்களை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறினார்.
இயேசு சபையினர் சிரியாவின் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி வருகின்றனர். இக்குடும்பங்களில் 80 விழுக்காட்டினர் முஸ்லிம்கள்.