இயேசு நம் மத்தியில் வருவதன்மூலம் அவர் நமக்கு மிக அருகில் வருகிறார் மற்றும் நம்மைச் சந்திக்கிறார்; அவர் இன்றும் திருவருள்சாதனங்கள் வழியாக நம்மைச் சந்திக்கிறார் என்று தனது டுவிட்டரில் இப்புதனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியம், இலத்தீன், ஆங்கிலம், அரபு உட்பட ஒன்பது மொழிகளில் ஏறக்குறைய தினமும் டுவிட்டரில் எழுதி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் இறந்ததன் 35வது ஆண்டு நினைவு நாளான இச்செவ்வாய்க்கிழமை மாலையில், புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்திலுள்ள அவரது கல்லறைக்குச் சென்று செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பின்னர், வத்திக்கான் புனித மார்த்தா இல்லத்தின் முன்னர், Brescia மறைமாவட்ட்த்தின் இளையோர் குழு ஒன்றையும் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் சொந்த மறைமாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளையோர், அத்திருத்தந்தையின் நினைவுநாளை முன்னிட்டு ஒரு வார நடைப்பயணத்தை மேற்கொண்டு, இச்செவ்வாயன்று அதனை வத்திக்கானில் நிறைவு செய்தனர்.
திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், 1978ம் ஆகஸ்ட் 6ம் தேதி தனது 81வது வயதில் காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இறையடி சேர்ந்தார்.