இந்திய கத்தோலிக்க ஆயர்களின் அடுத்த நிறையமர்வுக்கூட்டம் 2014ம் ஆண்டு பிப்ரவரி 19 முதல் 26 வரை கேரளாவின் பாளை மறைமாவட்டத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈராண்டுக்கு ஒருமுறை இடம்பெறும் அனைத்து இந்திய ஆயர்களின் இந்த ஒரு வாரக் கூட்டம், பாளை மறைமாவட்டத்தில் உள்ள அருணாபுரத்தின் அல்ஃபோன்ஸா மேய்ப்புப்பணி மையத்தில் நடைபெறும் என்றார் இந்திய ஆயர்பேரவையின் பொதுச்செயலர் பேராயர் ஆல்பர்ட் டிசூசா.
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் அழைப்புக்குப் பதிலளிக்கும் விதமாக ‘புதுப்பிக்கப்பட்ட சமுதாயத்திற்கென புதுப்பிக்கப்பட்ட திருஅவை’ என்பது இந்த நிறையமர்வுக் கூட்டத்திற்கு தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருவார கூட்டத்தின்போது, ஆயர்கள், புனித அல்ஃபோன்ஸா திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றுவதோடு, அண்மைப் பங்குதளங்களையும் சென்று சந்திப்பர்.
1944ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்திய ஆயர்கள் பேரவையின்கீழ் இலத்தீன், சீரோ மலபார் மற்றும் சீரோ மலங்கரா வழிபாட்டுமுறைகளின் 166 மறைமாவட்டங்கள் உள்ளன.