இயேசுவைப்போல, நாம் அனைவரும் தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உதவ வேண்டுமென, புனித கயத்தான் விழாவையொட்டி அர்ஜென்டினா மக்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டினா தலைநகர் புவனோஸ் ஐரெஸ் மாநகரின் Liniers புறநகர்ப் பகுதியில் இப்புதனன்று வெகு ஆடம்பரமாகச் சிறப்பிக்கப்படும் புனித கயத்தான் விழாவையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள காணொளிச் செய்தியில், இயேசு நமக்குப் போதித்துள்ளது போன்று, தேவையில் இருப்போரைத் தேடிச்செல்லும் கலாச்சாரச் சந்திப்பை நாம் கட்டியெழுப்ப வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தான் புவனோஸ் ஐரெஸ் பேராயராக இருந்த சமயத்தில் ஆண்டுதோறும் இவ்விழா நாளின் மாலையில் திருப்பலி நிகழ்த்தியதை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களிலும், நாம் வாழும் இடங்களிலும், வேலைகளிலும் காணப்படும் வேறுபாடுகள் உதவுவதில்லை, மாறாக, நாம் வெளியேச் சென்று மற்றவர்களைச் சந்திப்பதே உதவும் என்று கூறியுள்ளார்.
‘இயேசுவோடும் கயத்தானோடும் அதிகம் தேவையில் இருப்போரைச் சந்தித்தல்’ எனும் தலைப்பில் இவ்வாண்டு புனித கயத்தான் விழா சிறப்பிக்கப்படுவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையில் இருப்போரைச் சந்தித்து அவர்களைத் தொட்டுப் பேசி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
தொழிலின் பாதுகாவலராகிய புனித கயத்தான் விழாவான ஆகஸ்ட் 7ம் தேதியன்று புவனோஸ் ஐரெஸின் Liniers பகுதியில், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இலட்சக்கணக்கான பக்தர்கள் மணிக்கணக்காய் வரிசையில் நின்று அப்புனிதரின் ஆசீர் பெற்றுச் செல்கின்றனர். உணவு, வேலை, அமைதி ஆகிய மூன்று காரியங்களுக்காக அதிகமாக இந்நாளில் செபிக்கின்றனர்.