திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும், அனைத்துச் சூழல்களிலும் துணிச்சலோடு நற்செய்தி அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று உலக மறைபரப்பு தினச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வாண்டு அக்டோபர் 20ம் தேதியன்று சிறப்பிக்கப்படும் 87வது உலக மறைபரப்பு தினத்துக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியில், நாம் அனைவரும் எல்லாச் சூழல்களிலும் நற்செய்தியைத் துணிச்சலுடன் அறிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நற்செய்தி அறிவிப்புப்பணி, வெளியில் மட்டுமல்ல, திருஅவை சமூகத்துக்குள்ளும் அடிக்கடி தடங்கல்களை எதிர்நோக்குகின்றது என்று அச்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
கிறிஸ்துவின் நற்செய்தியை அனைவருக்கும் அறிவிப்பதிலும், இக்காலத்தில் மக்கள் கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு உதவுவதிலும் விருப்பம், மகிழ்ச்சி, துணிவு, நம்பிக்கை ஆகியவை சிலநேரங்களில் குறைவுபடுகின்றது என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்துவைச் சந்திப்பதை மகிழ்ச்சியோடு எடுத்துச்சொல்வதற்கும், அவரின் நற்செய்தியின் தூதர்களாக இருப்பதற்கும் நாம் எப்போதும் துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இக்காலம் மற்றும் வருங்காலம் பேரச்சமிக்க மேகங்களால் அச்சுறுத்தப்படுகின்றன என்றும், இச்சூழல்களில் கிறிஸ்துவின் நற்செய்தியைத் துணிச்சலோடு அறிவிக்க வேண்டும் என்றும், நற்செய்தி அறிவிப்புப்பணி, தனிப்பட்ட அல்லது தனித்துவிடப்பட்ட ஒருவரின் செயலோ அல்ல, ஆனால் இது திருஅவையின் செயல் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கிறிஸ்துவின் நற்செய்தி, நம்பிக்கையின், கருணையின், ஒப்புரவின், ஒன்றிப்பின், மீட்பின் செய்தி என்றும், இது, இறைவனின் அருகாமையை அறிவிக்கும், இறைவனின் அன்பின் சக்தி தீமையின் இருளை மேற்கொண்டு நன்மைத்தனத்தின் பாதையில் நம்மை வழிநடத்துவதை அறிவிக்கும் செய்தி என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
உலக மறைபரப்பு தினம் 1926ம் ஆண்டில் ஆரம்பமானது.