நைஜீரியாவின் அஹியாரா மறைமாவட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆயரை, அம்மறைமாவட்டத்தினர், கடந்த சில ஆண்டுகளாக ஏற்க மறுத்துவருவது குறித்து, தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பெனடிக்ட் அவர்களால் நியமிக்கப்பட்ட ஆயர் Okpaleke அவர்களை ஏற்க மறுத்துவரும் அஹியாரா மறைமாவட்ட மக்கள், திருஅவையை அழிவுக்குள்ளாக்கும் செயலை செய்கின்றனர் என்ற கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய நிலைகள் குறித்து திருத்தந்தை ஒருவர் மௌனம் காக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
நைஜீரியா நாட்டிலிருந்து ஆயர் Okpaleke அவர்களுடன் வந்திருந்த உயர் மட்ட ஆயர் குழுவினரை வியாழன் மாலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னை குறித்து தன் மனது மிகவும் வேதனையடைவதாகக் கூறினார்.
திருத்தந்தைக்கு ஒவ்வோர் அருள்பணியாளரும் தங்கள் கீழ்ப்படிதலை தெரிவிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, திருத்தந்தையால் நியமிக்கப்படும் ஆயரை ஏற்கவேண்டும் எனவும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு தாய் தன் குழந்தைகளை கைவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, இந்த மறைமாவட்டம், தொடர்ந்து செயல்பட தான் அனுமதிப்பதாகவும் கூறியுள்ளார்.