திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின், மற்றும் திருப்பீட உயர் அதிகாரிகளுடன் இச்சனிக்கிழமையன்று காலை, இத்தாலிய அரசுத்தலைவர் மாளிகை சென்று அரசுத்தலைவரைச் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு, இத்தாலிய அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்ற திருத்தந்தையை, மாளிகை வளாகத்தில் வந்து நின்று, வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்றார், அரசுத்தலைவர், செர்ஜியோ மாத்தரெல்லா (Sergio Mattarella).
திருத்தந்தைக்கு, இராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு வழங்கப்பட்டு, இரு நாட்டு தேசியப் பண்களும் பாடப்பட்டப்பின், அரசு மாளிகைக்குள் திருத்தந்தையும், அரசுத்தலைவரும் சென்று தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டனர்.
இதன்பின், இத்தாலிய அரசு உயர்மட்ட அதிகாரிகள் திருத்தந்தைக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டபின், திருத்தந்தையுடன் சென்ற திருப்பீட உயர்மட்டக் குழுவினரும் இத்தாலிய அரசுத்தலைவருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட, பின்னர், திருத்தந்தையும், அரசுத்தலைவரும் அரசு மாளிகையில் உள்ள சிறு கோவிலில் சிறிது நேரம் செலவிட்டனர்.
மத்திய இத்தாலியின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஏறத்தாழ 200 பேரை, அரசு மாளிகைத் தோட்டத்தில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.