மூவொரு இறைவன் பெருவிழா

உயிர்ப்பு ஞாயிறு துவங்கி ஒன்றன்பின் ஒன்றாக நாம் பல விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளோம். இவ்விழாக்களின் சிகரமாக, இன்று, மூவொரு இறைவன் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். கொண்டாட்டங்கள், ஒன்றை ஒன்று தொடர்ந்து வரும்போது, நமது மனநிலை எப்படி இருக்கும்? ஒன்றுக்கு மேல் ஒன்றாக, பெரிதான, பிரமிப்பான, உண்மைகள், நம்மை மகிழ்வில் ஆழ்த்தும்போது, பேச்சிழந்து போவோம்.

கண்களில் கண்ணீர் பெருகும். அப்படி ஓர் அனுபவத்தை நமக்குத் தருவது, அல்லது, தரவேண்டியது, இன்றைய மூவொரு இறைவன் திருவிழா. ஆனால், கண்களில் நீர் வழிய, கரங்களைக் குவித்து, உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்படும் ஒரு விழாவாக இது அமையாமல், நம் சிந்தனையளவில் நின்றுபோகும் விழாவாக இது அமைந்துவிடுகிறது.

மூவொரு இறைவனை தன் சிந்தனையால் அளக்கமுயன்ற மறைவல்லுனரான புனித அகஸ்டின் அவர்களைப் பற்றிய கதை நம்மில் பலருக்கு நினைவிலிருக்கும். கடற்கரை மணலில் ஒருநாள் நடந்துகொண்டிருந்த புனித அகஸ்டின் அவர்கள், நம் இறைவன் மூன்று ஆட்களாய், ஒரே கடவுளாய் இருப்பது எவ்விதம் சாத்தியம் என்று தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து விடை தேடிக் கொண்டிருந்தார்.

அக்கடற்கரையில் எதையோ மும்முரமாகச் செய்துகொண்டிருந்த ஒரு சிறுவன், புனித அகஸ்டின் அவர்களின் கவனத்தை ஈர்த்தான். அச்சிறுவன் ஒரு சிறிய சிப்பியில் கடல் நீரை அள்ளியெடுத்து, கரையில் இருந்த ஒரு குழியில் ஊற்றிவிட்டு, மீண்டும் கடலுக்குச் சென்று நீர் எடுத்து வந்தான்.

நான்கு அல்லது ஐந்து முறை சிறுவன் இதுபோல் செய்ததைப் பார்த்த அகஸ்டின், சிறுவனிடம் சென்று, “என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். சிறுவன் அவரிடம், “பார்த்தால் தெரியவில்லையா? நான் இந்தக் கடல் நீர் முழுவதையும் அந்தக் குழிக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறேன்.” என்றான்.

அந்தக் குழந்தைத்தனமான பதிலைக் கேட்டு, இலேசாகப் புன்னகைத்த அகஸ்டின், அச்சிறுவனிடம், “இந்தக் கடல் நீர் முழுவதையும் உன்னால் எப்படி அந்தச் சிறு குழிக்குள் ஊற்றிவிட முடியும்?” என்று கேட்டார். அச்சிறுவன் அகஸ்டினை ஆழமாகப் பார்த்து, “உங்களுடைய சிறிய அறிவைக் கொண்டு அளவு கடந்த கடவுளை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும்?” என்று பதில் கேள்வி கேட்டுவிட்டு, மறைந்து போனான்.

ஒரு குழந்தையின் வழியே அதிர்ச்சி மருத்துவம் கொடுத்து, தன்னைப்பற்றிய ஒரு புதுப்பாடத்தை இறைவன் சொல்லித்தந்தார் என்பதை, புனித அகஸ்டின் உணர்ந்தார். “அன்பைக் காணமுடிந்தால், மூவொரு இறைவனையும் காணமுடியும்” என்று அந்த இறைவனைப்பற்றி, புனித அகஸ்டின் பின்னொரு காலத்தில் சொன்னார்.

நம் அறிவுக்குள் கடவுளை அடக்கிவிட முயலும்போதெல்லாம், 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த Evegrius என்ற கிரேக்கத் துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்வது நல்லது. “கடவுளை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியாது. அப்படி அடக்க முடிந்தால், அவர் கடவுளாக இருக்க முடியாது” என்றார் Evegrius.

அமெரிக்க அரசுத்தலைவராய் இருந்த Franklin D.Roosevelt (FDR) அவர்களைப்பற்றி சொல்லப்படும் ஒரு கதையும் இங்கு உதவியாக இருக்கும். Roosevelt அவர்களும், அவரது நெருங்கிய நண்பர் Bernard Baruch அவர்களும், ஒருநாள் வெள்ளை மாளிகையில் சந்தித்து, அன்று முழுவதும் உலகப் பிரச்சனைகளைப்பற்றிப் பேசினார்கள். இரவு உறங்கச் செல்வதற்கு முன், Roosevelt அவர்கள், தன் நண்பரிடம், “வாருங்கள் நாம் தோட்டத்திற்குச் சென்று, விண்மீன்களைச் சிறிதுநேரம் பார்த்துவிட்டு வருவோம்” என்றார்.

Roosevelt அவர்கள் சொன்னதை நண்பர் புரிந்து கொள்ளவில்லை. இருந்தாலும், அவர் உடன் சென்றார். அவர்கள் தோட்டத்தில் நின்று, தெளிவான அந்த இரவு வானில் கண்சிமிட்டிய விண்மீன்களைப் பார்த்தனர். ஒரு சில நிமிடங்கள் அமைதியாக விண்மீன்களைப் பார்த்தபின், Roosevelt அவர்கள் தன் நண்பரிடம், “சரி, நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பது இப்போது புரிகிறது. வாருங்கள், உறங்கச் செல்வோம்.” என்று சொன்னார்.

அமெரிக்க அரசுத்தலைவராக இருப்பதால், தானே இந்த உலகம் முழுவதையும் சுமப்பதுபோல் Roosevelt அவர்கள் உணர்வதற்கு ஒவ்வொரு நாளும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன. ஆனால், இரவில் அவர் மேற்கொண்ட இந்த ஒரு சிறு பழக்கத்தின் வழியாக, தனது உண்மை நிலையை அவரால் உணர முடிந்தது. அந்த மனநிலையோடு அவர் உறங்கச்சென்றது, அவர், தனக்குத் தானே கற்றுத்தந்த ஓர் அழகிய பாடம். கடவுளுக்கு முன், அவரது படைப்புக்கு முன், நாம் யார் என்பதை உணர்ந்தால், அவரை நம் அறிவுக்குள் அடக்கிவிட முடியும் என்ற கனவுகளும், அடக்கிவிடும் முயற்சிகளும் விலகி, உண்மைக் கடவுளை உய்த்துணர முடியும்.

கடவுள் நமக்குப் பல திறமைகளைக் கொடுத்துள்ளார். தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், புரிந்து கொள்ளுதல், என்று பல நிலைகளில் நாம் நம் அறிவை வளர்க்க முடியும். இவற்றிற்கெல்லாம் மேலாக, உணர்ந்து கொள்ளுதல், உய்த்து உணர்தல் ஆகிய ஆழ்நிலை தியானத் திறமைகளையும் நாம் பெற்றுள்ளோம். தெரிந்துகொண்டதை, அறிந்துகொண்டதை, புரிந்துகொண்டதை நாம் வார்த்தைகளால் விளக்கிவிட முடியும்.
ஆனால், வாழ்வின் மிக ஆழமான பல உண்மைகளை, நம் மனத்தால் உய்த்துணர்ந்த உண்மைகளை, வார்த்தைகளால் விளக்க முடியாது.
புனித அகஸ்டின் தன் மனதின் ஆழத்தில் உய்த்துணர வேண்டிய மூவொரு கடவுள் என்ற உண்மையை தன் அறிவுத்திறன் கொண்டு அறிந்து, தெரிந்து, புரிந்துகொள்ள முயன்றார். எப்படி மூன்று ஆட்கள் ஒரே கடவுளாய் இருக்க முடியும் என்ற கேள்வியை அவர் தனக்குள் எழுப்பி, விடைகள் தேட முயன்றார்.

‘எப்படி’ என்ற கேள்விக்குப் பதில் ‘ஏன்’ என்ற கேள்வியை புனித அகஸ்டின் எழுப்பியிருந்தால், ஆழமான, வித்தியாசமான, வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளைப் படித்திருக்கலாம்.

நம் இறைவன் எப்படி மூவொரு கடவுளாய் இருக்கிறார்? என்ற கேள்விக்கு பக்கம் பக்கமாக இறையியல் விளக்கங்கள் சொல்லலாம். அந்த விளக்கங்கள் எல்லாமே நம் அறிவுப்பசிக்கு உணவூட்டும், நம் மனதைத் தொடாமலேயேச் சென்றுவிடும். எப்படி என்பதற்குப் பதில் ஏன் என்ற கேள்வியை எழுப்புவோம். நம் இறைவன் ஏன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்? அவரைப்பற்றிய ஒரு சில அழகான உண்மைகளையும், அதன் விளைவாக, நம் வாழ்க்கைக்குத் தேவையான உண்மைகளையும் சொல்லித்தர, நம் இறைவன் மூவொரு கடவுளாய் இருக்கிறார்.

நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதை நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசுவின் காலம்வரை, இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை, தந்தை, மகன், தூயஆவியார் என்ற, ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர், இயேசு.

இயேசு இவ்விதம் அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம், நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன், உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்?

உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித்தர வேண்டும் என்று இன்று சிறப்பாக மன்றாடுவோம்.

உறவுகளே வாழ்வின் உயிர்நாடி என்பதை ஆணித்தரமாக நம் உள்ளத்தில் பதிக்கும் மூவொரு இறைவன் திருவிழாவைத் தொடர்ந்துவரும் திங்களன்று, நெருடலான எண்ணங்களை உருவாக்கும் ஒரு நாளை நாம் சிறப்பிக்கவிருக்கிறோம். சென்ற வாரம், தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவைத் தொடர்ந்து வந்த உலகச் சுற்றுச்சூழல் நாள் நம் உள்ளங்களை கேள்விகளால் நிறைத்தன.

அதேபோல், இந்த ஞாயிறு, நாம் கொண்டாடும் மூவொரு இறைவன் திருவிழாவைத் தொடர்ந்து வரும் ஜூன் 12ம் தேதி, நமக்குள் சங்கடங்களை உருவாக்குகிறது. அதுதான், குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாள் (World Day Against Child Labour). உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மூவோரு இறைவன் திருநாளைத் தொடர்ந்து, குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாள் வருவது, உறவுகளை இழந்திருக்கும் குழந்தைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க நமக்குத் தரப்பட்டுள்ள ஓர் அழைப்பு!

மனித வரலாற்றில், குழந்தைகள் எப்போதும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குடிசைத் தொழில் அல்லது குடும்பத்தின் பாரம்பரியத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இது, குழந்தைகள் மேல் சுமத்தப்பட்டத் தொழில் அல்ல; அவரவர் குடும்பத் தொழிலைக் கற்பதே ஒரு கல்வி என்றுகூட சமாதானங்கள் சொல்லப்பட்டன.

தொழில் புரட்சி வந்தபின், அந்தப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்த இயந்திரங்கள், மனிதர்களை விட முக்கியத்துவம் பெற்றன. அந்த இயந்திரங்களைத் தொடர்ந்து இயக்குவதற்கு, பெரியவர், சிறியவர் என்று, எல்லாரும், 24 மணி நேரமும், சுழற்சி முறையில் வேலைகள் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. சிறுவர்கள், ஆலைகளில், தொழிற்சாலைகளில் ஆபத்தானச் சூழல்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். சிறுவர்களில் பலர் அந்த இராட்சத இயந்திரங்களுடன் மேற்கொண்ட போரில், உடல் உறுப்புக்களை இழந்தனர், பல வேளைகளில் உயிரையும் இழந்தனர்.

பெரும் செல்வந்தர்களின் வீடுகளில் பணிக்கு அமர்த்தப்பட்ட சிறுமிகள், இரவும் பகலும் தொடர்ந்து உழைக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இவர்களில் பலர், இச்செல்வந்தர்களின் உடல் பசியை, வெறும் உணவால் மட்டுமல்ல, தங்கள் உடலாலும் தீர்க்க வேண்டிய கொடுமைகள், இந்த மாளிகைகளில் நிகழ்ந்தன.
இங்கே பட்டியலிடப்பட்டுள்ள அவலங்கள், எங்கோ, எப்போதோ, நடந்துமுடிந்த வரலாறு என்று எண்ணவேண்டாம்.

இன்றும் இத்தகைய அவலங்கள் தொடர்கின்றன. இதைவிட ஒரு பெரும் கொடுமை, கடந்த 50 ஆண்டுகளில் அதிகம் வளர்ந்துள்ளது. சிறுவர், சிறுமியர், போர்ச் சூழல்களில், படைவீரர்களாகவும், மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தப்படும் கொடுமை அது. அதேவண்ணம், உலகில், கட்டுப்பாடின்றி வளர்ந்துள்ள போதைப்பொருள் வர்த்தகத்திலும் சிறுவர், சிறுமியர் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவது, வருங்காலத் தலைமுறைகளுக்கு நாம் இழைக்கும் மிகப்பெரிய குற்றம்.

மூவொரு இறைவன் திருநாளை, ஒரு குடும்பத் திருநாளாக, ஜூன் 11, இஞ்ஞாயிறன்று, அர்த்தமுள்ள வகையில் கொண்டாடமுடியும். அதேபோல், குழந்தைத் தொழிலை எதிர்க்கும் உலக நாளையும் ஒரு திருநாளாக நாம் கொண்டாடமுடியும். எப்போது? உலகில், குழந்தைத் தொழிலாளிகள், சிறார் படைவீரர்கள் என்று யாரும் இல்லாதபோது, ஜூன் 12ம் தேதியையும், நாம், நெஞ்சுயர்த்தி, ஒரு திருநாளாகக் கொண்டாடமுடியும்.

அதுவரை, குழந்தைகளுக்கு எதிராக நாம் இழைத்துள்ள குற்ற உணர்வுகளால் பாரமான மனதோடு, தலைகுனிந்தே நாம் வாழவேண்டும். குழந்தைகளுக்கு எதிராகக் குற்றம் புரிவோரின் கழுத்தில் பாரமான ஏந்திரக் கல்லைக் கட்டி கடலில் அமிழ்த்துவது நலம் என்று (மத். 18:6; மாற். 9:42; லூக். 17:2) இயேசு கூறியது நினைவிருக்கலாம். குழந்தைகளை வதைக்கும் குற்றங்களால் பாரமாய்ப் போன நம் மனங்களே, எந்திரக் கல்லாக, நம் கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ளதைப்போல் நாம் உணர்கிறோம்.

உலகெங்கும் துன்புறும் குழந்தைத் தொழிலாளிகளை விடுவிக்கும் வழிகளைச் சிந்திக்க, சென்ற ஞாயிறு நாம் கொண்டாடிய ஞானத்தின் ஊற்றான தூய ஆவியார் நமக்கு அருள்தர மன்றாடுவோம். அக்குழந்தைகளை மனித குடும்பத்தில் இணைத்து, வளர்க்கும் வழிகளை நடைமுறைப்படுத்த, உறவுகளின் ஊற்றாக விளங்கும், மூவொரு இறைவன், தெளிவையும், துணிவையும், தரவேண்டும் என்று இந்த ஞாயிறன்று மன்றாடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *