எனது நம்பிக்கையாகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

AP3377772_Articoloஎனது நம்பிக்கையாகிய கிறிஸ்து உயிர்த்துவிட்டார் என்ற ஆறுதலளிக்கும் உயிர்ப்பின் அறிவிப்பை, இந்த யூபிலி ஆண்டில் மீண்டும் ஆழமாகக் கண்டுணர்ந்து அதனை வரவேற்போம் என்று இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்துவரும் திங்களை, வானதூதரின் திங்கள் என்று அழைக்கிறோம் என்று சொல்லி, கிறிஸ்துவின் உயிர்ப்பின் மகிழ்வு பற்றிய சிந்தனைகளை, இத்திங்கள் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் வழங்கினார் திருத்தந்தை.

வாழ்வு, மரணத்தையும், இரக்கமும் அன்பும் பாவத்தின் மீதும் வெற்றியையும் கண்டுள்ளன என்றும், இந்த வியத்தகு புதிய எல்லையைத் திறப்பதற்கு விசுவாசமும் நம்பிக்கையும் அவசியம் என்றும் கூறிய திருத்தந்தை, கிறிஸ்து உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார் என்ற உயிர்ப்புச் செய்தி நம்மில் எதிரொலித்துக்கொண்டே இருக்கட்டும் என்றும் கூறினார்.

இத்திங்களன்று நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த இலட்சக்கணக்கான மக்களிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, எனது நம்பிக்கையாகிய கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்ற சொற்களை மூன்று முறை அனைவரும் சப்தமாகச் சொல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்துள்ளார் எனில், நம் வாழ்வின் எதிர்மறை நிகழ்வுகள் உட்பட அனைத்து நிகழ்வுகளையும் புதிய கண்களோடும், புதிய இதயத்தோடும் நாம் பார்க்கலாம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் துன்பங்கள் மற்றும் பலவீனங்களால் துவண்டு கிடக்கும்போது நாம் எழுந்து நடப்பதற்கு, உயிர்த்த கிறிஸ்து சக்தியைத் தருகின்றார், நாம் உண்மையிலேயே அவரைச் சார்ந்திருந்தால் அவரின் அருள் நம்மை மீட்கும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்த கிறிஸ்து, இரக்கத்தின் முழுமையான வெளிப்பாடு, இவர் வரலாற்றில் பிரசன்னமாய் இருந்து செயலாற்றுகிறார், இந்த உயிர்ப்புச் செய்தி, இன்றும், இந்த உயிர்ப்புக் காலம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் என்றும் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *