பாகிஸ்தானின் லாகூர் நகர் பொது மக்கள் பூங்கா ஒன்றில், இஞ்ஞாயிறன்று, கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுவெடிப்புத் தாக்குதலில், பல அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கின்றது என்று சொல்லி, இத்தாக்குதலுக்கு எதிரான தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் நண்பகலில், அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய பின்னர், பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ள இப்பயங்கரவாதத் தாக்குதலை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இது மிகவும் கண்டனத்துக்குரியது மற்றும் இந்நாள் இரத்தம் சிந்தப்பட்ட உயிர்ப்பு நாள் என்றும் கவலையோடு கூறினார்.
இந்தக் கோழைத்தனமான மற்றும் அறிவற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் தோழமை உணர்வு கொண்டு செபிப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.
பாகிஸ்தானில், குறிப்பாக, மிகவும் நலிவடைந்த சிறுபான்மை மத மக்களுக்குப் பாதுகாப்பையும் அமைதியையும் கொண்டு வருவதற்குப் பொறுப்புடைய அதிகாரிகளும், சமூக அமைப்புகளும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வன்முறையும், கொலைக்கு இட்டுச்செல்லும் வெறுப்பும், வேதனை மற்றும் அழிவையே கொணரும், ஒருவரையொருவர் மதிப்பதும், உடன்பிறப்பு உணர்வுமே அமைதியை அடையும் ஒரே வழி என்று மீண்டும் சொல்கிறேன் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த அனைவரோடும் சேர்ந்து அன்னைமரியை நோக்கிச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.