பாகிஸ்தானில், லாகூர் நகரில் பூங்கா ஒன்றில், கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடந்துள்ள குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு அந்நாட்டுத் தலத்திருஅவையும் தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
லாகூரை மையமாகக் கொண்டு இயங்கும் கத்தோலிக்கத் தொலைக்காட்சி மையத்தைத் தொடங்கியவரும், அதன் நிகழ்ச்சிப் பொறுப்பாளருமான அருள்பணி மோரிஸ் ஜலால் அவர்கள், இத்தாக்குதல் மிகவும் வேதனையளிக்கின்றது என்றும், எம் மக்களைச் சுற்றி நடக்கும் செயல்களுக்கு எங்களால் கண்டனம் தெரிவிக்க மட்டுமே முடியும் என்றும் கூறியுள்ளார்.
இத்தாக்குதல், லாகூர் கிறிஸ்தவ சமூகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது என்றும், எங்களால் செபிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது என்றும் கூறியுள்ளார் அருள்பணி மோரிஸ் ஜலால்.
இஞ்ஞாயிறு மாலையில், லாகூரிலுள்ள Gulshan-e-Iqbal பூங்காவில் நடத்தப்பட்ட இத்தாக்குலுக்கு, தாலிபானைச் சேர்ந்த Tehreek-i-Taliban Pakistan Jamaatul Ahrar என்ற குழு பொறுப்பேற்றுள்ளது.
பஞ்சாப் மாநில முதலமைச்சர் Shehbaz Sharif அவர்கள், இதில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளதோடு, அம்மாநிலத்தில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.