அன்புள்ளங்களே, கியூபா, அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கான பத்து நாள்கள் கொண்ட தனது 10வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு உரோம் சம்ப்பினோ விமான நிலையம் வந்திறங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானுக்குக் காரில் வந்த வழியில் உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பசிலிக்கா சென்று மலர்க்கொத்து வைத்து அன்னைக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை. இத்திருத்தூதுப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரும் திருத்தந்தை மேரி மேஜர் அன்னை மரியா பசிலிக்கா சென்று செபித்தார்.
இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் இரவு 7 மணிக்கு ஃபிலடெல்ஃபியா பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்ற திருத்தந்தையை வழியனுப்புவதற்கு அமெரிக்க ஐக்கிய நாட்டு உதவி அரசுத்தலைவர் Joe Biden, ஃபிலடெல்ஃபியா மேயர் Michael Nutter, பென்சில்வேனியா ஆளுனர் Tom Wolf, திருஅவைத் தலைவர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இசைக்குழு ஒன்று, இன்னும் பொது நிலையினரும் காத்திருந்தனர்.
மாணவர்கள் குழு பாடல் பாடியது. பின்னர், ஃபிலடெல்ஃபியா பேராயர் சார்லஸ் ஷாபுட், இத்திருத்தூதுப் பயணத்தின் நிர்வாகக் குழுவினர், நன்கொடையாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார் திருத்தந்தை. இப்பயணத்தை மனம்நிறைந்த பாராட்டு மற்றும் நன்றியுடன் நிறைவு செய்கிறேன் என்றும் திருத்தந்தை அவர்களிடம் கூறினார்.
பின்னர் ஃபிலடெல்ஃபியா பன்னாட்டு விமான நிலையத்தில் திருத்தந்தையை வழியனுப்பச் சென்றிருந்த உதவி அரசுத்தலைவர் Joe Biden அவர்களிடம், அரசுத்தலைவர் பாரக் ஒபாமா மற்றும் காங்கிரஸ் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்குமாறு கூறினார். அனைவரிடமும் எனக்காகச் செபியுங்கள், இறைவன் அமெரிக்காவை ஆசிர்வதிப்பாராக என்று வாழ்த்தி அமெரிக்க ஐக்கிய நாட்டு விமானத்தில் ஏறினார் திருத்தந்தை.
விமானத்தில் அமர்ந்தவுடன் ஜன்னல் வழியாகவும் கையசைத்து மக்களை வாழ்த்தி நன்றி கூறினார். எட்டு மணி நேரம் விமானப் பயணம் செய்து வத்திக்கான் வந்தடைந்த திருத்தந்தை, எனது இதயம்நிறை நன்றிகள். கிறிஸ்துவின் அன்பு அமெரிக்க மக்களை எப்போதும் வழிநடத்துவதாக என்று, தனது டுவிட்டர் பக்கத்திலும் இத்திங்களன்று பதிவு செய்தார்.