ஏமனில் தொடர்ந்து பணியாற்ற அன்னை தெரேசா சபையினர் விருப்பம்

RV13982_Articolo
ஏமனின் நிலைமை எப்படியிருந்தாலும், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போர்க்குத் தங்கள் சபை தொடர்ந்து பணியாற்றும் என்று, அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை கூறியுள்ளது.

அச்சபையின் நான்கு அருள்சகோதரிகள், ஏடன் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து, அச்சபை Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியிருந்த தகவலில், ஏமனில் தங்களின் பணியை விட்டுவிடுவது பற்றிய சிந்தனையே கிடையாது என்று தெரிவித்துள்ளது.

அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் பணியாற்றச் சென்ற இடங்களின் நிலைமை எப்படியிருந்தாலும், உலகில் தேவையில் இருப்பவர்க்கு அவர் தொடர்ந்து பணியாற்றினார் என்றுரைத்துள்ளது அச்சபை.

பிறரன்பு மறைப்பணியாளர்கள் சபை ஏடன் நகரில் பணியாற்றிவந்த முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்ட அறிவற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில், நான்கு அருள்சகோதரிகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அருள்சகோதரிகளில் ஒருவரான ஆன்செல்ம் அவர்கள், இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்.

மேலும், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுள்ள அருள்பணியாளர் Tom Uzhunnalil அவர்களைப் பாதுகாப்பாக விடுதலை செய்வதற்கு இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

சண்டை இடம்பெறும் ஏமனில் இந்தியாவுக்குத் தூதரகம் இல்லையென்றாலும், அருள்பணியாளரின் விடுதலைக்காக, இந்திய அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார் சுஷ்மா சுவராஜ்.

இத்தாக்குதலில் உயிர்பிழைத்த சகோதரி அவ்விடத்தைவிட்டு அகற்றப்பட்டு விட்டதாகவும் கூறினார் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload CAPTCHA.