அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கான இத்திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தான் தங்கியிருந்த, ஃபிலடெல்ஃபியா புனித சார்லஸ் பொரோமேயோ குருத்துவக் கல்லூரியில் இஞ்ஞாயிறு காலையில், மூன்று பெண்கள் மற்றும் இரு ஆண்களை ஏறக்குறைய அரைமணி நேரம் சந்தித்துப் பேசினார்.
திருப்பீட சிறார் பாதுகாப்பு அவைத் தலைவரான பாஸ்டன் கர்தினால் Sean O’Malley, ஃபிலடெல்ஃபியா பேராயர் Charles Chaput, ஃபிலடெல்ஃபியா உயர்மறைமாவட்ட சிறார் பாதுகாப்பு அலுவலகத் தலைவர் ஆயர் Fitzgerald ஆகிய மூவரும் இந்த ஐவர் சந்திப்பின்போது இருந்தனர்.
இந்த ஐவரும், தங்களின் சிறு வயதில் அருள்பணியாளர்கள், ஆசிரியர்கள் அல்லது தங்களின் குடும்ப உறுப்பினர்களால் பாலியல்முறையில் தவறாகப் பயன்படுத்தப்பட்டவர்கள். இந்த ஐந்து பேரின் துன்பக் கதைகளைக் கேட்டு அவர்களோடு சேர்ந்து செபித்தார் திருத்தந்தை. இந்த ஐவரும் பாலியல் முறையில் பயன்படுத்தப்பட்டவர்கள்.
இவர்களின் துன்ப வேதனைகளிலும், அவமான உணர்விலும் தான் அவர்களோடு இருப்பதாகவும், உலகளாவியத் திருஅவை இத்தகையோரின் குரலுக்குச் செவிமடுத்து நீதியோடு அவர்களை நடத்துமாறும், இக்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுமாறும், திருஅவையிலும், சமுதாயத்திலும் இத்தகைய குற்றங்கள் அகற்றப்படுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
அதோடு, உண்மையை நிலைநாட்டுவதிலும், குணப்படுத்தும் பாதையில் உறுதியாய் இருப்பதற்கும் இவர்களுக்கு திருத்தந்தை நன்றி தெரிவித்தார். திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் இச்சந்திப்பு பற்றி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த போது திருத்தந்தை கூறியவற்றைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பிற்குப் பின்னர், இந்த 8வது உலக குடும்பங்கள் மாநாட்டுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த ஆயர்களுக்கு அக்குருத்துவக் கல்லூரியில் உரையாற்றிய திருத்தந்தை, அருள்பணியாளர்களின் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இவர்களின் துன்பக் கதைகளையும், வேதனைகளையும் என் இதயத்தில் எழுதியுள்ளேன், தங்களின் கனிவான பாதுகாப்பின்கீழ் இருந்த மக்களைப் பாலியல் முறையில் துன்புறுத்தி அவர்களைச் சிதைப்பது வெட்கத்துக்குரியது, இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன், இறைவனும் கண்ணீர் சிந்துகிறார், இத்தகைய குற்றங்கள் இனிமேல் இரகசியமாக வைக்கப்படக் கூடாது, சிறாரைப் பாதுகாப்பதில் திருஅவை விழிப்புடன் இருக்கும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு உறுதி கூறுகிறேன் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.