இந்த உலகம் பெரும் மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில், திருஅவை நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டுள்ளது, இந்தப் பணியை கருணை நிறைந்த அன்பு மொழியில் ஆற்ற வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தியை புதிய வழியில் அறிவிப்பதை ஊக்குவிக்கும் திருப்பீட அவை நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐம்பது பிரதிநிதிகளை இவ்வெள்ளி நண்பகலில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
நற்செய்தியை அறிவிக்கும்போது பயன்படுத்தும் மொழியில் புதுப்பித்தல் தேவை என்றும், இதனால், நற்செய்தியைப் பெறுபவர்கள் அதனைப் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
தங்களோடு நடந்து, விசுவாசத்துக்குச் சாட்சி சொல்கின்ற மற்றும் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்குத் தோழமையுணர்வைக் காட்டுகின்ற ஒரு திருஅவையை மக்கள் விரும்புகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, நற்செய்தியை புதிய வழியில் அறிவித்தல் என்பதன் உண்மையான பொருளை விளக்கினார்.
வானகத்தந்தை நம்மீது வைத்திருக்கும் கருணைநிறை அன்பை உணர்ந்தவர்களாய், நம் சகோதரர்களின் மீட்புக்குக் கருவிகளாக நாம் வாழ வேண்டும் என்றும், நற்செய்தி அறிவிப்பு முறைகளில், கல்விக்கூட மறைக்கல்விப் பாடங்களையும் கடந்து, மக்கள் கிறிஸ்துவைச் சந்தித்து அவரைப் பின்சென்று அவரின் சீடர்களாக வாழ்வதற்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்
திருத்தந்தை.
இப்பிரதிநிதிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட, நற்செய்தி அறிவிப்புக்கும், மறைக்கல்விக்கும் இடையே உள்ள உறவு குறித்த சிந்தனைகளையே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் பகிர்ந்து கொண்டார்.
இச்சந்திப்பில், நற்செய்தியை புதிய வழியில் அறிவிப்பதை ஊக்குவிக்கும் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella அவர்களும் இருந்தார்.