தன்னலமிக்க அல்லது ஆதாயம் தேடும் வாழ்வுப் பாதையில் வீழ்ந்து விடாதிருக்கவும், வியப்புக்களை நிகழ்த்தும் விசுவாச வாழ்வைக் கொண்டிருக்கவும் இறைவனிடம் இறைஞ்சுவோம் என்று இவ்வெள்ளி காலைத் திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உண்மையான விசுவாசம் என்பது, பிறரிடம் மனத்தாராளமாக நடந்து கொள்வதாகும்; யார் மேலாவது மனத்தாங்கல் இருந்தால் அவர்களை மன்னிப்பதாகும்; தன்னல, வளமற்ற மற்றும் ஆதாயம் தேடும் மதமாக திருஅவை செயல்படாமல் இருப்பதுமாகும் என்று மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வெள்ளிக்கிழமை திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை, ஆன்மீகத் தன்னலத்திற்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டார்.
கனிகொடாத அத்தி மரம், ஆலய வர்த்தகர்கள், விசுவாச மனிதர் ஆகிய மூன்று உருவகங்களைப் பயன்படுத்தி நாம் வாழ வேண்டிய பாதைகளைப் பரிந்துரைத்தார் திருத்தந்தை. பிறருக்கு நன்மை அளிக்காத வறண்ட வாழ்வுக்கு அத்தி மரத்தை எடுத்துக்காட்டாகச் சொல்லி, இந்த மரம் தனக்காகவும், எவ்விதப் பிரச்சனைகளை விரும்பாமலும் வாழ்கின்றது என்றும், இயேசு இத்தகைய ஆன்மீகத் தன்னலத்தைக் கண்டிக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆலய வியாபாரிகள் போன்று, இலாபம் தேடுபவர்களாக ஒரு குழுவினர் வாழ்கின்றனர் எனவும், மதத்தை வர்த்தகமாக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, இயேசு காட்டிய விசுவாசப் பாதையில் வாழும் மூன்றாவது குழுவினர் பற்றியும் எடுத்துச் சொன்னார்.
இறைவனில் விசுவாசம் வைத்து செபிக்கும்போது இறைவனுக்கு நெருக்கமாகச் செல்கிறோம், விசுவாசம் அற்புதங்களை உருவாக்குகின்றது, இத்தகைய விசுவாச வாழ்வுக்காகச் செபிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.