இந்தியாவின் அனைத்து தலைமை நீதிபதிகளுக்கும் புனித வெள்ளியன்று மூன்று நாள் கூட்டம் ஒன்று தொடங்கவிருப்பது குறித்து தனது கவலையைத் தெரிவித்து இந்திய தலைமை நீதிபதி H L Dattu அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது இந்திய ஆயர் பேரவை.
இந்தியாவில் நூற்றாண்டளவாக காக்கப்பட்டுவரும் அனைத்து மதத்தவரின், குறிப்பாக, சிறுபான்மை மதத்தவரின் புனித நாள்கள் குறித்த விசுவாசத்தை இந்நடவடிக்கை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
உலகிலுள்ள அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் ஆண்டின் மிக முக்கிய நாள்களில் ஒன்றான புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்து மனித சமுதாயத்தின் மீட்புக்காகத் தம்மையே தியாகம் செய்த மிக உன்னத செயல் மிகுந்த பக்தியோடு நினைவுகூரப்படுகின்றது என்று அக்கடிதம் கூறுவதாக, CBCI என்ற இந்திய ஆயர் பேரவையின் உதவிப் பொதுச் செயலர் அருள்பணி Joseph Chinnayyan அவர்கள் கூறினார்.
கிறிஸ்மஸ் நாளை நல்லாட்சி தினமாக இந்திய அரசு மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளவேளை, கிறிஸ்மஸ், புனித வெள்ளி, உயிர்ப்புப் பெருவிழா ஆகிய நாள்களின் முக்கியத்துவத்தை வேண்டுமென்றோ அல்லது அவ்வாறு இல்லாமலோ குறைத்து மதிப்பிடுவது கிறிஸ்தவ சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கும் என்று எச்சரித்தார் அருள்பணி Chinnayyan.