இப்புதன் மாலை 3.15 மணிக்கு ஹெலிகாப்டரில் மடுத் திருத்தலம் (Shrine of Our Lady of Madhu) சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். இலங்கையின் வடக்கே தமிழர் பகுதியான மன்னார் மறைமாவட்டத்தில் மடு என்ற இடத்தில் அமைந்துள்ள மடு அன்னைமரியா திருத்தல வரலாறு 400 வருட பழமை கொண்டது.
அக்காலத்தில் இலங்கை மக்கள் போர்த்துக்கீசியர்களால் கிறிஸ்தவர்களாக மனமாறினர். போர்த்துக்கீசியர்களின் தாக்கம் பரவிவிடும் என்று பயந்த யாழ்ப்பாண மன்னர் சங்கிலி, 1544ம் ஆண்டில் 600 மன்னார் கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்தார். இப்படுகொலைக்குப் பயந்த சில விசுவாசிகள் தற்போதைய மடுத் திருத்தலப் பகுதியில் ஒரு சிறிய அன்னைமரியா உருவத்தை வைத்து வணங்கினர். மேலும், 1583ம் ஆண்டில் மேலும் சில கிறிஸ்தவர்கள் மன்னாரிலிருந்து தப்பி வந்து ஒரு சிறிய ஆலயத்தை இவ்விடத்துக்கு அருகில் கட்டினர்.
மண்தாய் (Mantai) என்று அழைக்கப்பட்ட இதுவே மடு அன்னைமரியாவின் முதல் வீடாக இருந்தது. 1656ம் ஆண்டில் டச்சுக்காரர் சிலோனில் காலனி ஆதிக்கத்தைத் தொடங்கியபோது வன்முறையினால் கத்தோலிக்கரை துன்புறுத்தினர். அப்போது புகலிடம் தேடிய 30 கத்தோலிக்க குடும்பங்கள் தங்களுடன் மடு அன்னைமரியா திருவுருவத்தை எடுத்துச் சென்று 1670ம் ஆண்டில் மருதமடு என்ற இடத்தில் அதனை வைத்தனர்.
அந்த இடத்தில்தான் தற்போதைய மடு அன்னைமரியா திருத்தலம் உள்ளது. இது, இலங்கை தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழாவில் ஏறக்குறைய 10 இலட்சம் மக்கள் இன, மத பேதமின்றி கலந்து கொள்கின்றனர். மடு அன்னைமரியா திருத்தலம் சென்ற திருத்தந்தையைக் காணச் சென்றிருந்த மக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும் தரமன்று. இங்கு போரில் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டவர்களில் ஏறக்குறைய ஆயிரம் பேர் சக்கர வண்டிகளில் அமர்ந்திருந்தனர்.
ஹெலிகாப்டரிலிருந்து இறங்கிய திருத்தந்தைக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். ஒரு வெண்புறாவையும் திருத்தந்தை பறக்கவிட்டார். திறந்த காரில் அவர் விசுவாசிகள் மத்தியில் வந்தபோது சக்கர வண்டியில் அமர்ந்திருந்தவர்களைத் தூக்கி திருத்தந்தையிடம் காட்டி ஆசீர் பெறச் செய்தனர்.
அன்னைமரியாவுக்கு வழிபாடு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இடம்பெற்றது. செபங்கள் பாடல்கள் எல்லாம் தமிழிலும் சிங்களத்திலும் அழகாகப் பாடப்பட்டன. அன்னையின் திருவுருவத்திற்குத் திருத்தந்தை செபமாலை அணிவித்தார். இவ்வழிபாட்டில் திருத்தந்தை உரையாற்றினார்.
இச்செப வழிபாட்டை முடித்து ஹெலிகாப்டரில் கொழும்பு சென்றார் திருத்தந்தை. இவ்வியாழன் காலையில் இலங்கை திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து பிலிப்பீன்ஸ்க்குப் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.