அன்பு நெஞ்சங்களே, இலங்கைத் திருஅவைக்கு சனவரி 14, இப்புதன் வரலாற்றில் மறக்க முடியாத நாள். இப்புதன் காலையில் கொழும்பு காலிமுகத் திடலில் முத்திப்பெறுபெற்ற ஜோசப் வாஸ் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதராக அறிவிக்கும் நாள்.
இலங்கை நேரம் காலை 8.30 மணிக்குத் தொடங்கவிருந்த இத்திருப்பலியில் கலந்து கொள்வதற்காக மக்கள் முந்திய நாள் மாலையிலே ஆயிரக்கணக்கில் அங்கு வந்து இரவைச் செலவழித்தனர். காலை 4 மணிக்கெல்லாம் அத்திடல் நிறைந்துவிட்டது.
இந்தியப் பெருங்கடல் கடற்கரையில் உள்ள இந்த காலிமுகத் திடலில் அமர்ந்திருந்த ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் மத்தியில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்குத் திருத்தந்தை திறந்த காரில் வந்தார். குழந்தைகளையும் சக்கரவண்டியில் இருந்தவர்களையும் ஆசீர்வதித்தார். இத்திருப்பலியில் ஜோசப் வாஸ் அவர்களை, புனிதர் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அப்போது கோவாவில் ஆலய மணிகள் ஒலிக்கப்பட்டன.
இத்திருப்பலியில் 1100 அருள்பணியாளர்கள், கோவா ஆயர் உட்பட நான்கு இந்தியக் கர்தினால்கள், இந்தியத் திருப்பயணிகள் என பெருமளவான விசுவாசிகளும் கலந்து கொண்டனர். தமிழிலும் சிங்களத்திலும் விசுவாசிகள் மன்றாட்டும் பாடல்களும் இடம்பெற்றன. சிங்கள மரபு இசையில் இளையோரின் நடனமும் இடம்பெற்றது.
இத்திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையில் மறைப்பணியாற்றி கண்டியில் இறந்தவர் புனிதர் ஜோசப் வாஸ். இவரை புனிதராக அறிவித்த திருப்பலியை முடித்த திருத்தந்தைக்கு, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் எழுபதாயிரம் டாலரை, திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கெனக் கொடுத்தார். எங்கள் நாடு ஏழை நாடு, ஆயினும் திருத்தந்தையின் பிறரன்புப் பணிக்கு உதவ விரும்புகிறோம் என்று சொல்லிக் கொடுத்தார் கர்தினால் இரஞ்சித்.
மேலும் திருத்தந்தையும், 17ம் நூற்றாண்டில் கண்டி மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கே, இலங்கைத் திருஅவைக்கு வழங்கிய ஆவணத்தின் பிரதியை இலங்கைத் தலத்திருஅவைக்குப் பரிசாகக் கொடுத்தார். பெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் கிறிஸ்தவர்களாக விரும்புவர்களுக்கு அனுமதி அளிக்கும் ஆவணம் அது.
இத்திருப்பலிக்குப் பின்னர் கொழும்பு திருப்பீடத் தூதரகம் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை. இந்நாளில், திருத்தந்தை தனது டுவிட்டரில், புனிதரான ஜோசப் வாஸ் அவர்களே, நாங்கள் புனிதத்தில் வளர்ந்திடவும், நற்செய்தியின் இரக்கம் என்ற செய்தியை வாழ்ந்திடவும் எங்களுக்குக் கற்றுத் தாரும் என எழுதியுள்ளார். திருத்தந்தையின் இப்பயணத்தையொட்டி, இலங்கை நீதித்துறை அமைச்சர் 612 கைதிகளுக்கு விடுதலை வழங்கியுள்ளார்.