குடும்பங்கள் தினமும் செபம் செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்

RV2750_Articoloபிலிப்பீன்ஸ் நாட்டில் இவ்வெள்ளி மாலை கடைசி நிகழ்ச்சியாக அந்நாட்டின் குடும்பங்களைச் சந்தித்து, குடும்பம் ஒரு கொடை என்ற தலைப்பில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவிவிலியம் புனித யோசேப் பற்றி அரிதாகவே பேசுகிறது. அப்படிப் பேசும்போதும் அவர் ஓய்வில் இருந்ததையும், அந்நேரங்களில் அவருக்குக் கனவுகளில் வானதூதர் கடவுளின் விருப்பத்தை வெளிப்படுத்தியதையும் வாசிக்கிறோம். இப்போது நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்திப் பகுதியில் யோசேப் ஒரு முறை அல்ல, இருமுறைகள் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்.

யோசேப்பின் ஓய்வில் கடவுளின் திட்டம் அவருக்கு வெளிப்படுத்தப்படுகிறது. நமக்கும் நமது பல அன்றாட கடமைகளிலிருந்தும் வேலைகளிலிருந்தும் நாம் ஓய்வாய் இருக்கும்போது கடவுள் நம்மிடம் பேசுகிறார். ஆண்டவரில் ஓய்வு, இயேசுவோடும் மரியாவோடும் எழுந்திருத்தல், இறைவாக்குக் குரலாக இருத்தல் ஆகிய மூன்று தலைப்புக்களில் இன்று பேசவிருப்பதாகக் கூறி, தனது உரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஓய்வு நம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது. ஆயினும், நம் ஆன்மீக நலத்துக்கும் ஓய்வு இன்றியமையாதது. அப்போதுதான் நாம் கடவுளின் குரலைக் கேட்டு அவர் நம்மிடம் கேட்பதை புரிந்துகொள்ள முடியும். யோசேப் போல கிறிஸ்தவர்களாகிய நீங்களும் இயேசுவுக்கு ஒரு வீட்டை அமைத்துக் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளீர்கள். இதற்கு நீங்கள் ஆண்டவர் இயேசுவில் ஓய்வெடுக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் செபம் செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். ஆனால், எங்களுக்குச் செபிக்க விருப்பம்தான், ஆனால் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும், களைப்பாக இருக்கிறது, தூங்க வேண்டும், இப்படி ஆயிரத்தெட்டு காரணங்களை நீங்கள் சொல்லலாம். இவை உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் நாம் செபிக்காவிட்டால் நமக்குரிய கடவுளின் திட்டத்தை அறியமாட்டோம்.

செபத்தில் நிலைத்திருப்பது குடும்பங்களுக்கு முக்கியமானது. குடும்பங்களில்தான் நாம் செபிக்கக் கற்றுக்கொள்கிறோம். அங்கு கடவுளை அறிந்து விசுவாச மனிதர்களாக வளருகிறோம். அன்புகூரவும், மன்னிக்கவும், தன்னலமின்றி மனத்தாராளமாக இருக்கவும் குடும்பங்களில் கற்றுக்கொள்கிறோம்.

அடுத்து யோசேப் போல, கடவுளின் குரலைக் கேட்டவுடன் இயேசுவோடும் மரியாவோடும் எழுந்திருந்து செயலில் இறங்க வேண்டும். இந்த உலகில் இறையாட்சி மலர நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது.

புனித யோசேப்பிடம் திருக்குடும்பம் கொடையாக வழங்கப்பட்டது போல, குடும்பம் என்ற கொடையும், கடவுளின் திட்டத்தில் அதன் இடமும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இயேசுவையும், மரியாவையும் அச்சுறுத்திய ஆபத்துக்கள் யோசேப்புக்கு வானதூதரால் வெளிப்படுத்தப்பட்டன. இன்றும் குடும்ப வாழ்வை பல அழுத்தங்கள் நெருக்குகின்றன. இங்கு பிலிப்பீன்சில் இயற்கைப் பேரிடரின் தாக்கங்களால் இன்னும் எண்ணற்ற குடும்பங்கள் துன்புறுகின்றன. பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பைத் தேடி புலம்பெயர வைக்கின்றது.

நிதிப் பிரச்சனைகள் பல குடும்பங்களில் மன அழுத்தங்களை ஏற்படுத்துகின்றன. பலர் கடும் ஏழ்மையில் வாடும்போது மற்றவர்கள் உயர்ந்த வாழ்வை அனுபவிக்கின்றனர். இது குடும்ப வாழ்வையும் கிறிஸ்தவ அறநெறிகளையும் அழிக்கின்றன. திருமண அமைப்பு, உறவுகள், மேலோட்டமான கலாச்சாரம், வாழ்வுக்குத் திறந்த மனப்பான்மை இல்லாமல் இருத்தல் ஆகியவற்றாலும் குடும்பம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றது.

இத்தகைய அச்சுறுத்தல்களை வெற்றி காணும் நல்ல மற்றும் உறுதியான குடும்பங்கள் இந்த நம் உலகுக்கு அவசியம். கடவுளின் திட்டத்தில் குடும்பத்தின் அழகையும் உண்மையையும் பாதுகாப்பதற்கும், பிற குடும்பங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்கும் தூய மற்றும் அன்புக் குடும்பங்கள் பிலிப்பீன்ஸ்க்குத் தேவைப்படுகின்றன.

நம் சமூகங்கள் மத்தியில் இறைவாக்குக் குரலாக நீங்கள் இருங்கள். கிறிஸ்துவின் நண்பர்களே உங்களுக்காக நான் எப்போதும் செபிக்கின்றேன். எனக்காகவும் தயவுகூர்ந்து செபியுங்கள். உங்கள் செபம் உண்மையிலேயே எனக்குத் தேவைப்படுகின்றது. உங்கள் செபத்தை எப்போதும் நான் சார்ந்திருக்கிறேன்.
இவ்வாறு இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *