இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அருளாளர்கள் குரியாக்கோஸ் சவாரா, யூப்ராசியா எலுவத்திங்கல் ஆகிய இருவர் உட்பட ஆறு பேரை புனிதர்கள் என அறிவிக்கவுள்ளார். ஏறக்குறைய இரண்டு கோடி கத்தோலிக்கர் வாழும் இந்தியாவில், அதாவது இந்திய மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 1.55 விழுக்காடாக உள்ள கத்தோலிக்கர், திருஅவையால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட சில புனிதர்களையும் அருளாளர்களையும் கொண்டுள்ளனர்.
சென்னை மயிலையில் கிறிஸ்தவ விசுவாசத்துக்காகக் கொல்லப்பட்ட இயேசுவின் திருத்தூதராகிய புனித தோமையார் தொடங்கி, புனிதர்கள் பிரான்சிஸ் சேவியர், கொன்சாலா கிராசியா, அருளானந்தர், மார்த் அல்போன்சா போன்ற புனிதர்கள் ஏற்கனவே உள்ளனர். அருளாளர்கள் அன்னை தெரேசா, தேவசகாயம் பிள்ளை…… இப்படி சிலரும் உள்ளனர்.
ஆயினும் இந்திய மண்ணிலே பிறந்து புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளவர்கள் என்று சொன்னால், முதலில் கொன்சாலா கிராசியாவைக் குறிப்பிடலாம். ஆனால் அவரைக்கூட முழுமையாய்ச் சொல்ல இயலாது. ஏனெனில் அவரது பெற்றோரில் ஒருவர் இந்தியர் அல்ல. ஆனால் அருள்சகோதரி புனித மார்த் அல்போன்சா(Marth Alphonsa 1910-1946)வை முதல் இந்தியப் புனிதர் என்று கூறலாம்.
அவரோடு சேர்ந்து, நவம்பர் 23, 2014 இஞ்ஞாயிறன்று மேலும் இரு இந்தியப் புனிதர்கள் கிடைக்கின்றனர். இது தவிர, இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையில் மறைப்பணியாற்றிய ஜோசப் வாஸ் அவர்கள் வருகிற சனவரியில் கொழும்பு நகரில் திருத்தந்தையால் புனிதராக அறிவிக்கப்படவுள்ளார்.
1877ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, திருச்சூருக்கு அருகிலுள்ள காட்டூரில் பிறந்த புனித யூப்ராசியா எலுவத்திங்கல் அவர்களின் இயற்பெயர் ரோசா எலுவத்திங்கல். பணக்கார பண்ணையார் குடும்பத்தில் பிறந்த இவர், தனது தாயிடமிருந்து செபமாலை செபிக்கவும், திருப்பலியில் கலந்துகொள்ளவும் கற்றுக்கொண்டார்.
இவர் தனது 9வது வயதில் அன்னை மரியாவைக் காட்சியில் கண்டார். இதுவே இவர் திருமணத்தை விரும்பாமல், துறவு வாழ்வை மேற்கொள்ள காரணமானது. இவர் கன்னியர் வாழ்வைத் தேர்ந்துகொள்வதை முதலில் இவரது தந்தை கடுமையாய் எதிர்த்தார். பின்னர் தந்தையின் ஒப்புதலுடன் கார்மேல் அன்னை சபையில் சேர்ந்தார் ரோசா. இயேசுவின் திருஇதயத்தின் யூப்ராசியா என்ற பெயரை துறவு சபையில் ஏற்றார்.
துறவுப் பயிற்சி காலத்தில் இவர் கடும் நோயால் தாக்கப்பட்டார். எனவே இவரை வீட்டுக்கு அனுப்புவதற்குத் துறவு சபை தலைவர்கள் தீர்மானித்தனர். ஆனால் யூப்ராசியாவுக்குத் திருக்குடும்பம் காட்சியளித்தது. அவரின் நோயும் குணமானது. அச்சபையின் பயிற்சியாளர்கள் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். பின்னர் ஒல்லூர் இல்லத் தலைவரானார்.
ஆனால், எல்லா வேளைகளிலும், செபத்திலும் திருஇதய பக்தியிலும் ஆழமாக வேரூன்றினார். இவர் அதிக நேரம் சிற்றாலயத்தில் திருநற்கருணை முன்னர் செலவிட்டார். அதோடு அன்னை மரியா மீதும் ஆழ்ந்த பக்தியை வளர்த்தார் இவர். அருள்சகோதரி யூப்ராசியம்மா 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி ஒல்லூர் இல்லத்தில் இறந்தார். அதற்குப் பின்னர் இவரிடம் செபித்த பலர் புதுமைகளைப் பெற்றனர். அதனால் இவரது கல்லறை திருப்பயண இடமாக மாறியது. அருள்சகோதரி யூப்ராசியம்மா, 2014ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி இஞ்ஞாயிறன்று புனிதராக உயர்த்தப்படுகிறார்.