வெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்வது என்பது இறப்புக்கு சமம், வெளித்தோற்றத்தை உண்மைதன்மைக்குக் கொணர்வதே கிறிஸ்தவ வாழ்வு என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்வதில் எவ்வித பயனும் இல்லை என எடுத்துரைத்தார்.
ஆன்மீக வாழ்வை மேற்கொள்வதிலும், கோவில் திருமணங்களிலும் நிறைவுகண்டு முடிந்துவிடுவதல்ல கிறிஸ்தவ வாழ்வு, மாறாக அது தனக்குள்ளேயே உயிர்துடிப்புடையதாக இருக்க வேண்டும்; அதுமட்டுமல்ல, அந்த வெளித்தோற்றத்திலிருந்து உண்மை தன்மை நோக்கி மனம் மாறவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசு எரிக்கோ நகர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது சக்கேயுவைக் கண்டு அவர் வீட்டிற்கு சென்ற நிகழ்வை மையப்படுத்திய இச்செவ்வாய்க்கிழமை திருப்பலி வாசகம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, அநியாயமான வகையில் ஊழல் செய்து பணம் ஈட்டும் தலைவர்கள் இன்றும் உலகில் உள்ளனர் என்றார்.
பெரும் செல்வந்தராகவும், வரி வசூலிப்பவரின் தலைவராகவும் இருந்தபோதிலும் சக்கேயு, இயேசுவைக் காண மரத்தில் ஏறியதைப்பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சக்கேயு அவர்களின் உள்ளத்தில் எழுந்த ஆர்வம், தூய ஆவியின் விதையாக இருந்து, அவரை தூய்மை நிலைக்குத் தயாரித்தது என்றார்.
சக்கேயுவின் மனமாற்றம் உண்மையானதாக இருக்கும் அதேவேளை, சக்கேயுவின் மனமாற்றத்தை ஏற்காமல் இருக்கும் ஏனையோரின் விமர்சனங்களோ ஏற்புடையதல்ல; ஏனெனில், பாவியாகிய சக்கேயுவின் வீட்டிற்குள் இயேசு நுழைந்ததையே பாவச்செயல் என அவர்கள் கருதினர் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.